Social Icons

.

Friday, July 1, 2011

தீப்பிடிக்க தீப்பிடிக்க .....



 
தீ விபத்து - வருமுன் காப்போம்


இல்லங்களில் ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது ?



வீடுகளில் ஏற்படும் தீ விபத்துக்கள் மிக கொடூரமானவை ஆகும். ஓரு ஆண்டில் சுமார் 5000 உயிர்கள் தீக்கு இரையாகிறார்கள், அவற்றில் 80 சதவிகிதம் வீட்டில் ஏற்படும் தீ விபத்துக்களின் விளைவாகும். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மரணங்களை காட்டிலும், தீ விபத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கூடுதல் ஆகும்.

மிகவும் வேகமாக பரவி 2 நிமிடங்களில் உயிர் அபாயம் விளைவிக்க கூடியது நெருப்பு. ஒரு முழு வீட்டை 5 நிமிடங்களுக்குள் பஸ்பமாக்கி விடும் இயல்பு தீக்கு உள்ளது. பெரும்பாலான தீ விபத்துக்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ கூடியவை தான். ஒவ்வொரு வருடமும், தீயினால் ஏற்படும் பொருள் நஷ்டம், பண நஷ்டம், உயிர் சேதங்கள் மிகவும் வருந்ததக்கதாகும். மனித சேதங்கள் தவிர்த்து, லட்சகணக்கில் மதிப்பிடபடும் உடைமைகள் நெருப்பில் கலந்து சாம்பலாகி இருக்கின்றன.

தீ விபத்துக்கள் மனிதனால் ஏற்படும் ஒன்றாகும். ஆகையால் இது தவிர்க்க கூடிய ஒன்றாகும். நம் கவனமின்மை மற்றும் அடிப்படை எச்சரிக்கைகளை உணராமல் இருப்பது போன்ற காரணங்களினால்தான் இது போன்ற விபத்துகள் நிகழ்கின்றன.



தீ விபத்துக்களை தவிர்க்க சில ஆலோசனைகள் :

தீயணைப்பு நிபுணர்களின் கருத்துப்படி, கீழ்காணும் வகையில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்

1) மின் கசிவு, தளர்ந்த இணைப்புகள்,பாதுகாப்பற்ற இணைப்புகள், ஓவர்-லோட், தரம் குறைந்த மின் உபகரணங்கள், தேர்ச்சியற்ற நபர்களால் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள்.

2) கவனிக்கப்படாத அல்லது சரியாக மூடப்படாத விளக்குகள்  மற்றும் மெழுகுவர்த்திகள். வளர்ப்பு ப்ராணிகள் அல்லது குழந்தைகளால் தட்டி விடப்படுதல்.

3) உறங்கும் பொழுது, அணைக்கபபடாத நெருப்பு அல்லது கவனிப்பாரற்று / கவனிக்க ஆள் இல்லாதபொழுது ஏற்படும் நெருப்பு.

4) சமையல் எரிவாயு பயன்பாட்டில் போதிய பாதுகாப்பு பின்பற்றாமல் இருத்தல்

5) விறகு கட்டையின் அளவை கவனிக்க தவறுதல், மற்றும் அடுப்பை தாண்டி நீளும் விறகு கட்டைகள்.

6) சிகரெட் மற்றும் பீடியின் துண்டுகளை அணைக்காமல் வீசுவது.

7) கடவுள் படத்திற்கு முன்பு விளக்கை ஏற்றி, அவற்றை கவனிக்காமல் விடுதல்.



மேற்கூறப்பட்டுள்ள அனைத்து காரணிகளை பற்றி அறிந்திருந்தும், அவற்றை சரிவர பின் பற்றாமல், மற்றும் போதிய பாதுகாப்பு மேற்கொள்ளததாலும் தான் பெரும்பாலான தீ விபத்துக்கள் உண்டாகுகின்றன.

இல்லங்களில் தீ விபத்தை தவிர்க்க சில அறிவுறைகள் :

1) லைட்டர் மற்றும் தீபெட்டிகளை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

2) படுக்கையில் புகைபிடிப்பதை தவிர்க்கவும். நம் இல்லத்திற்கு வரும் விருந்தினரும் படுக்கையில் புகைபிடிக்க அனுமதி மறுக்கவும்.

3) சிகரட் மற்றும் தீபெட்டிகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும். குறிப்பாக குழந்தைகள் கையில் எட்டாத தூரத்தில் வைக்கவும். ஆஷ்ட்ரே சுத்தமாக வைத்துகொள்ளவும்.


4) எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை அடுப்படியில் வைக்காதீர்கள்.

5) லேசான ஆடையில் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், அவ்வாறு ஆடை அணிந்த நபர்களை விளக்கு , மெழுகுவர்த்தி, மற்றும் நெருப்பின் அருகே அனுமதிக்காதீர்கள்.

6) குத்துவிளக்குகள் ஏற்றுகையில் மிகுந்த கவனம் மேற்கொள்ளவும்.

7) பூஜை அறையில் நெருப்பு அணையாத ஊதுபத்தி மற்றும் சாம்பிராணிகளை வைக்காதீர்கள்.

8) தவறுதலாக கை படும் இடங்களில் மெழுகுவர்த்திகளை வைக்காதீர்கள்உபயோகத்திற்கு பின்பு மறக்காமல் மெழுகுவர்த்தியை அணைத்துவிடவும். வீட்டில் குழந்தைகளோ, வளர்ப்பு பிராணிகளோ இருந்தால்,மிகுந்த கவனம் மேற்கொள்ளவும்.



9) படுக்க போகும் முன்பு, மறக்காமல் கேஸ் சிலிண்டரை அணைத்துவிடுங்கள்புதிய மற்றும் பழுதில்லாத ட்யூப்களையே பயன்படுத்தவும்.

10) முடிந்த வரையில், வீடுகளை போதிய இடவெளியோடு கட்டமைக்கவேண்டும்.

11) வீட்டின் அருகே பட்டாசு, ராக்கெட் மற்றும் புஸ்வானங்களை வெடிப்பதை தவிர்க்கவும். திறந்த வெளியில், மேற்பார்வையோடு மட்டுமே இது பாதுகாப்பானதாக அமையும்.

12) இல்லத்தில் உள்ள அனைத்து மின் சாதனங்களும் சிறந்த முறையில் அமைத்துகொள்ளுங்கள்.ஓவர்லோட் ஏற்படாமல் இருக்க அவ்வப்போது வீட்டின் மின் இணைப்புகளை பராமரிப்பது நல்ல வழக்கமாகும்.

13) ஹீட்டர்களை மேற்ப்பார்வையின்றி விடாமல் இருப்பது குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை விபத்திலிருந்து காக்கும். தவறுதலாக ஹீட்டர் விழுந்துவிட்டால், அது தானாக அணைந்துவிடும்படி அமைத்துகொள்ளுங்கள்.



14) தீயணைப்பு சாதனங்களை வீட்டின் மிகுந்த இடருள்ள பகுதியில் நிறுவுவது சிறந்ததாகும்.ஆண்டிற்கு ஒரு முறை அதன் அழுத்தம் மற்றும் காலாவதி அவகாசத்தை சோதனைக்குட்படுத்துங்கள்.

15) புகையுணர்வு கருவிகளை பொருத்துதல் மற்றும் மாதம் ஒரு முறை அதை சோதனை செய்து, பாட்டரியை மாற்றி பேணுவது தீ விபத்தை தடுக்கவல்ல ஒரு சிறந்த வழியாகும்.

16) தனி வீட்டில் நீங்கள் வசிக்கும் பட்சத்தில், மாடி ஜன்னலில் இருந்து கயிற்றால் ஆன ஏணியை கட்டிவைத்து, அதன் பயன்பாட்டை குடும்பத்தினருக்கு பயிற்றுவித்தால் விபத்து காலத்தில் உதவியாக விளங்கும்.

17) ஆபத்தான சமயங்களில் தப்பிக்க சிறப்பு வழிகளை உண்டாக்கி, அவற்றை பயன்படுத்தி, எல்லோரும் தப்பித்து வீட்டின் வெளியே ஓர் இடத்தில் சேரும் பழக்கத்தை குடும்பத்தினர்களின் ஆலோசனையோடு வடிவமைத்து கொள்வது புத்திசாலித்தனமாகும்.



தீவிபத்தின் போது செய்யவேண்டிய செயல்கள் :

உங்கள் துணியில் தீப்பற்றிக்கொண்டால், உடனே நின்று, உடை களைந்து, தீ அணையும்வரை மண்ணில் உருளவும். ஓடினால் தீ இன்னும் பரவும் வாய்ப்பு உள்ளது.

தீயிலிருந்து தப்பிக்க :

மூடிய கதவுகளை திறக்கும் முன்பு அவற்றின் வெளிபுறத்தில் தீ பற்றாததை உறுதிபடுத்திகொள்ளுங்கள்.

அவ்வாறு திறக்க நேரிட்டால், கதவின் தாழ்பாள், விரிசல்களில் தங்கள் பின்னங்கையை வைத்து பார்த்து சோதித்துகொள்ளுங்கள்.

வெப்பத்தை அறிய உள்ளங்கையை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்உள்ளங்கையில் சூடு பட்டுவிட்டால் தவழ்ந்து செல்லவோ, ஏணியில் ஏறிச்செல்லவோ முடியாமல் போய்விடும்.

அதிகமான புகைமூட்டமுள்ள பகுதியை தவழ்ந்த நிலையில் மட்டுமே கடக்கவும். ஏனெனில், புகையும்நச்சுவாயுவும் முதலில் விட்டத்திலிருந்து தான் தொடங்கும்.

கதவை திறந்து தப்பிக்கும் பொழுது, தீ மேலும் பரவாமல் இருக்க கதவை மூடிவிட்டு செல்லவும்.

வீட்டிற்கு வெளியே வந்து அடைந்தபின், மீண்டும் உள்ளே போகாமல், தீ அணைப்பு வீரர்களை உடனே அழைப்பது புத்திசாலித்தனமாகும்.




அறிவுறைகளும், எச்சரிக்கைகளும்

சிறிய தீயை அணைக்க, அவசரகாலதிற்கு சமையல் சோடாவை பயன்படுத்தலாம்புகை விட்டத்தை நோக்கி பரவுவதால், புகையுணர்வு கருவியை உயரமான இடத்தில் பொருத்துங்கள்அலாரம்களை ஜன்னலின் அருகிலோ,கதவின் அருகிலோ நிறுவாதீர்கள்.

எறியும் வாணலியில் தீ அணைப்பு கருவியை பயன்படுத்தாதீர்கள்ஒவன் மற்றும் ஹீட்டரை தாண்டி தீ பரவும் பட்சத்தில், அதை அணைக்க முற்படாமல், முதலில் நீங்கள், உங்கள் குடும்பதினருடன் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள்புகை எச்சரிக்கை கருவி 10 வருடங்களுக்கு மேல் பழதாகிவிட்டால், புதிய கருவியை வாங்கி நிறுவுங்கள்.



சுற்றுபுறத்தில் எங்கேனும் தீ விபத்து நேர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை :

1) தீ விபத்து நேர்ந்தால், அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் நிலையதிற்கு உடனடியாக தகவல் அளியுங்கள். அவர்கள் தொலைபேசி எண்களை கைக்கு எட்டும்படி வைத்திருத்தல் அவசியமாகும்.

2) தீ விபத்து நேர்ந்த இடத்தின் தெளிவான முகவரியயும், விரைவாக வந்து சேர சரியான வழியயும் தெரிவிக்கவும்.

3) தீ அணைப்பான் எச்சரிக்கை மணி கேட்டதும், வழி ஏற்படுத்தி கொடுக்கவும்.

4) தீ அணை படை தீயை அணைக்கப் போராடும் போது, அவர்களை தொல்லை செய்யாதீர்கள்.

5) மக்கள் நெரிசல் அதிகரித்தால், தீ அணைப்பு மற்றும் மீட்பு பணி தடைபடும்.

6) தீ விபத்து நேர்ந்தால், கூச்சலிட்டு உதவி நாடுங்கள்.

7) விபத்திற்குள்ளான நபரிடமிருந்து குறுகிய எண்ணம் கொண்ட நபர்கள் அவர்கள் பொருள்களை களவாடி செல்வதை தடுக்கவும்.

8) விபத்திற்குள்ளான நபர்களை உடனடியாக மருத்துவ உதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவுங்கள்.

பாதுகாப்பும், எச்சரிக்கையும் மட்டுமே தீ விபத்திலிருந்து உங்களை பாதுகாக்க வல்லது என்பதை நினைவில் நிறுத்திகொள்ளுங்கள்.



1 comment:

  1. நம் கவனமின்மை காரணமாகதான் இயற்கையும் அதன் பண்புகளை எதிரொலிக்கிறது என்பதற்கு இந்த கட்டுரை ஒரு அருமையான சான்றாகும். இவ்வாறான சூழ்நிலையை கையாளுதல் என்பது மனித இனத்திற்கு பெரிய சவால்தான்.

    புள்ளிவிவரங்கள், சான்றுகள் மற்றும் கட்டுரைக்கேற்ற பிம்பங்கள் என ஒரு நல்ல கலவையோடு கொடுக்கப்பட்டுள்ளமைக்கு நன்றி .

    கவனிக்க தவறினால் "தீப்பிடிக்க தீப்பிடிக்க" "நெருப்பும் கூத்தடிக்குது" என்றும் கூறலாம்.

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking