Social Icons

.

Sunday, July 31, 2011

துறவியின் பகல் கனவு


துறவியின் பகல் கனவுமுன்பொரு காலத்தில் ஒரு சோம்பேறி துறவி வாழ்ந்து வந்தார். ஏழையாகவும் அவர் இருந்தார். பெரும் செல்வந்தனாகும் கனவோடு அவர் இருந்தாலும் உழைப்பை நம்பாதவராக திகழ்ந்தார். அன்றாடம் கையேந்தி உணவு அருந்திய அவருக்கு ஒரு நாள் அதிகாலையில், ஒரு குடம் பால் பிச்சையாக கிடைத்தது. அதை பெற்றுக் கொண்ட அவர், மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றார். பின்பு பாலை கொதிக்க வைத்து அதிலிருந்து சிறிது அருந்தி விட்டு மிச்சம் உள்ள பாலில் சிறிது தயிர் ஊற்றி உறைய வைத்தார். அதன் பின் ஆனந்தமாக உறங்கச் சென்று விட்டார்.

உறங்குகையில் அவர் கனவு காணத் தொடங்கினார். எப்படியாவது பணக்காரனாகி எல்லா துன்பத்திலிருந்தும் விடு பட வேண்டும் என்று கனவு கண்டார். அப்போது அவர் கவனத்தில் தயிராக உறைக்கப் பட்ட பால் குடம் வந்தது. "ஆஹா, நாளை இந்த பால் எல்லாம் தயிராக உறைந்து விடும். நான் அந்த தயிரைக் கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணையை சூடாக்கி நெய் ஆக்குவேன். அந்த நெய்யை சந்தையில் விற்றால் பணம் கிடைக்கும். அப்பணத்தை கொண்டு ஒரு கோழி வாங்குவேன். அந்தக் கோழி பல முட்டைகள் இடும். அம்முட்டைகள் எல்லாம் குஞ்சுகள் பொரிக்கும். அவை வளர்ந்து கோழிகள் ஆகி மேலும் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடும். இப்படியே போனால் நான் ஒரு பெரும் கோழி பண்ணைக்கு அதிபர் ஆகிவிடுவேன்". இவ்வாறு அவர் கற்பனை நீண்டுக் கொண்டே போனது.

" இப்போது அந்தக் கோழிகளை எல்லாம் விற்று விட்டு சில காராம் பசுக்களை வாங்குவேன். பின்பு ஒரு பால் பண்ணை தொடங்குவேன். ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் என்னிடத்தில் பால் வாங்கி போவார்கள். நான் பெரும் பணக்காரனாகி பொன் நகைகள் வாங்கி குவிப்பேன். அந்த நகைகளை இந்த நாட்டின் அரசன் என்னிடமிருந்து வாங்கிக் கொள்வார். மேலும் செல்வந்தனாகி என்னை காட்டிலும் செல்வம் படைத்த குடும்பத்திலிருந்து ஓர் அழகான இளம் பெண்ணை மணப்பேன். விரைவில் எங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் ஏதேனும் குறும்பு செய்தால் நான் ஆத்திரமாகி அவனுக்கு பாடம் புகட்டுவேன். நீண்ட குச்சியை எடுத்து அவனை விளாசி தள்ளுவேன்", என்று கனவை தொடர்ந்த அவர், தன்னையும் அறியாமல் அருகில் இருந்த குச்சியை எடுத்து காற்றில் வீசினார். 'டப்' என்ற சத்தத்துடன் அவர் தூக்கமும் கனவும் சேர்ந்தே கலைந்தது. அவர் ஆசையாக கொண்டு வந்த பால் குடம் சுக்கு நூறாக தரையில் கிடந்தது.

கதையின் நீதி : உழைப்பிற்கு மாற்று ஏதுமில்லை. உழைப்பில்லாத எந்த கனவும் பலித்திடாது.

Saturday, July 30, 2011

மழலை


மழலை
வளர்ந்த பெரியோர்கள் உச்சரிக்கும் அன்பிலா.......
வாக்கினை விடவும்,
எத்தனை அர்த்தம் சின்னஞ்சிறு மழலை
பேசும் உளறல்களில் !

போதை கொண்டு தள்ளாடும் வாலிபர்களின்.....
கால்களை விடவும்,
பதியாமல் நடைப்பழகும் பச்சிளங்குழந்தையின்
கால்களில் எத்தனை உறுதி !

மனதிற்குள் கபடம் வைத்து பார்வையில்.....
பகட்டு பாசத்தை பரிமாறும்
புனிதர்களை விடவும்,
வாய் பேச பழகாத காலத்திலும்
பளிச்சென வீசும் பார்வைகளிலே
எத்தனை வெளிச்சம் !

வித விதமான ஆடைகளில் தங்கள்......
உள் அழுக்கை மறைக்கும்
மனிதர்களை விடவும்,
ஆடையே அணியாத அப்பாவி பிஞ்சுகளின்
அம்மணத்தில் தான்
எத்தனை தூய்மை !

வெளி தோற்றத்தினை கொண்டு......
ஆட்களை எடைபோடும்
அதிமேதாவிகளை விடவும்,
வேற்றுமுகம் பார்க்க தெரியாத
வெள்ளை மனதுகளில்
எத்தனை தெளிவு !

எளிதான உறவுகளை சிக்கலாக்கி .....
எதற்கும் உதவாத வைராக்கியம் கொள்ளும்
ஏளன பிறவிகளை விடவும்,
எதற்கெடுத்தாலும் மோகனமாய் புன்னகைக்கும்
வெகுளித்தனத்தில் த்தனை ஓளி !

மனிதன் வளர்ந்தபின் இத்தனையும் இழப்பான்....
என்று தெரிந்திருந்தால், ஒரு வேளை
கடவுளும் சிந்தித்திருப்பானோ ?

மழலை உலகின் மகிழ்ச்சி யாவும்......
இவ்விதம் தொலைத்து விடுவோம்
என்று அறிந்திருந்தால்,
ஒரு வேளை மனிதனும் சிந்தித்திருப்பானோ ?

இப்போதும் தாமதமில்லை
இனி வாழ்வில் பேதமுமில்லை......

மேனியை மனிதனாக.....
மனதை மழலையாகவே வைத்திருந்தால்...!Friday, July 29, 2011

தண்ணீர் தண்ணீர் .... !தண்ணீர் தண்ணீர் .... !
Ten Innovative Ways to Save Water !தங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் :

நாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் :

1)  தானியங்கி தண்ணீர் குழாய்கள் :
புதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி வரை தண்ணீர் செலவழிகிறது. இதுவே தானியங்கி குழாய்களில் 60 முதல் 80 மில்லி வரை தான் பயன்படுத்தப் படுகின்றது. தானியங்கி குழாய் என்பது தண்ணீரை அளவோடு வெளிப்படுத்தி கை கழுவ போதுமான அளவு வேகத்தோடு வழியச் செய்யும் ஒரு எளிய கருவியாகும் .2) சீதோஷணம் குளுமையாக இருக்கையில் நீர் ஊற்றுங்கள் :
வானிலை குளுமையாக காணப்படும் அதிகாலையிலோ அந்தி மாலையிலோ உங்கள் தோட்டம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுங்கள். இவ்வாறு செய்வதால் ஊற்றிய நீர் சீக்கிரம் நீராவி ஆகாமல் தடுக்கலாம்3)  இருவித ஃப்ளஷ்களை கழிவறையில் பயன்படுத்தவும் :
இரண்டு வெவ்வேறு அளவுகளில் நீரை வெளியேற்றும் விதமாக அமைந்த ஃப்ளஷ்களையே கழிவறையில் பயன்படுத்தவும். இக்கருவி சற்றே விலை கூடியதாக இருந்தாலும் பயன்படுத்துவோருக்கு தேர்வு செய்யும் வசதியும் அளித்து நீர் சிக்கனமும் அளிக்கிறது.4)  பிரத்தியேகமான தண்ணீர் மீட்டர் :
பல்மாடி குடியிருப்புக் கட்டடங்களில் பிரத்யேக தண்ணீர் மீட்டர்கள் நிறுவுவதால் அவரவரின் உண்மையான பயன்பாட்டை அறிவித்து ஆண்டிற்கு சுமார் எட்டு ஆயிரம் காலன் அளவு நீர் சிக்கன படுத்தப்படுகிறது.5)  தண்ணீர் கசிவுகளைக் கண்காணிக்கவும் :
தண்ணீர் மிக அதிகமாக செலவு ஆகும் வழி இது தான். குழாய்கள், தொட்டிகள் மற்றும் சிங்குகளில் உள்ள கசிவுகளை கவனிக்க அவ்வப்போது சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவ்வாறு கசிவு காணப் பட்டால் நீர் வரத்தை உடனடியாக அடைத்துவிடவும். பின்பு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் தண்ணீர் மீட்டரை கண்காணிக்கவும். மீட்டர் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தால் கசிவுகள் இருப்பது உறுதி ஆகிவிடும். சிறிய கசிவுகள் பெரும் அளவு நீரை அன்றாடம் வீணாக்க வல்லது நினைவிருக்கட்டும் !6)  குறைவாக நீர் பாய்ச்சும் ஷவர்கள் :
தண்ணீர் சேகரிப்பில் குறைந்த அளவு நீர் பாய்ச்சும் ஷவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. குழாய்க்கு பதிலாக சமையல் அறை மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தினால் தற்போது உபயோகப்படும் நீரை விட பாதி அளவே நீர் செலவழியும். அதே போல் உங்கள் ஷவர் குளியலை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே குறைத்துக்கொண்டால் மாதத்திற்கு 150 காலன்கள் வரை சேமிக்கப் படுகிறது.7)  குடிநீர் அல்லாத நீரை மறுபடியும் பயன்படுத்தவும் :
குடிக்க உதவாத நீரை தரை கழுவுதல், கழிவறை கழுவுதல் மற்றும் தோட்டத்திற்கு பாய்ச்சுதல் போன்றவைகளுக்காக பயன்படுத்தவும். இது வாஷ் பேசின், வாஷிங் மஷீன் மற்றும் ஷவர்களில் பயன்படுத்தி அதிலிருந்து வெளியேறும் நீரைக் குறிக்கும். இதை சேமித்து வைத்து மறுபடி பயன்படுத்தினால் தண்ணீர் வீணாவதை வெகுவாகக் குறைக்கலாம்.8)  மழை நீர் சேகரிப்பை ஊக்குவியுங்கள் :
சில மாநிலங்கள் மற்றும் நாடுகளில் மழை நீர் சேகரிப்பு வெகுவாக வலியுறுத்தப் படுகின்றது. 1500 சதுர மீட்டர்கள் வரை பரவி உள்ள எல்லாக் கட்டடங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்ற படுகிறது. இதை நிறுவும் செலவு சற்று அதிகம் ஆனாலும் இதன் மூலம் வருங்காலத்தில் ஏற்படும் தண்ணீர் கட்டணங்களை மனதில் வைத்தால் மிகவும் மலிவான ஒரு வழிமுறையாக இது கருதப் படுகிறது.9)  தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களை தவிர்க்கவும் :
தண்ணீர் தேவைப்படும் விளையாட்டு பொருள்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் தேவைப்படுவதால் அவ்வாறான பொருள்களை தவிர்ப்பது நல்லது.10) தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கவும் :
தண்ணீர் சேகரிப்பு பற்றிய குறிப்புகளை தவறாமல் தங்கள் நண்பர்களிடமும் சுற்றி உள்ளவர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். தங்கள் குடியிருப்பில் தண்ணீர் சேமிப்புக்கான வழிகளை மேற்கொண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வை பெரியோர்கள் மற்றும் குழந்தைகளிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

Wednesday, July 27, 2011

டைனாசர் 3 - வாழ்கை ரகசியங்கள்


Dinosaur 3 - Life Secrets

டைனாசர் - வாழ்கை ரகசியங்கள்

டைனாசர்கள் உருவத்தில் ஏன் பெரிதாக இருந்தன ?

"ரியோஜோசாரஸ்" என்ற டைனாசர் உச்சியிலிருந்து வால் நுணி வரை 10 மீட்டர் வளர்ந்து காணப்பட்ட ஒரு ராட்சஸ உயிரினம் ஆகும். அதன் அதீத உயரம் உயர்ந்த மர உச்சிகளையும் எளிதில் எட்டி உணவு சுவைக்க உதவியது. இவைகளின் இந்த அசாத்திய வளர்ச்சிக்கு அந்த காலத்தில் காணப்பட்ட தாவர இனங்களும் காரணமாக அமைந்தன. அப்போது உலகம் முழுவதும் மரங்கள்செடிகள் போன்றவை நிறைந்து இருந்தன. டைனாசர்கள் நாள் முழுவதும் அவற்றை அருந்திக்கொண்டே இருந்ததனால், தாவரங்களிடம் இருந்து பெற்ற உபரி சத்துக்கள் அவைகளை அவ்வாறு வளர செய்தன.

டைனாசர்களின் பெரிய உருவம் அவற்றின் தற்காப்பிற்கும் உதவியதுசமகாலத்தில் வாழ்ந்த ஊர்வனங்களாகிய "ருட்டி-டியான்" மற்றும் பெரும் முதலைகளுடன் சண்டையிட்டு தன்னை காத்துக்கொள்ள டைனாசர்களின் பெரும் உருவம் பயன்பெற்றது.
இவ்வுலகில் வாழ்ந்த மிக பெரிய டைனாசர் எது ?


இதுவரை கண்டறியப்பட்ட டைனாசர்களிலேயே மிகவும் பெரிதாக அறியப்படுவது "அர்ஜென்டினோசாரஸ்" ஆகும். அர்ஜென்டினாவில் வாழ்ந்த இந்த டைனாசரின் பெயருக்கு பொருள் "வெள்ளி பல்லி" .இந்த ராட்சஸ உருவம் பெற்ற டைனாசரை பற்றி போதுமான தகவல்கள் இல்லையென்றாலும், இவை தென் அமெரிக்கா துணைக்கண்டத்தில் 97ல் இருந்து 94 கோடி ஆண்டு முன்பு "மத்திய க்ரெடாஷியஸ்" காலத்தில் வாழ்ந்தன என்று அனுமானிக்கப்படுகிறது. உச்சியிலிருந்து வால் வரை சுமார் 40 மீட்டர் வளர்ந்த இந்த டைனாசர்கள், சிறிய தலை மற்றும் மூளையையே பெற்றிருந்தன. பரிணாம உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, "அர்ஜென்டினோசாரஸின்" குட்டிகள் நாள் ஒன்றுக்கு சுமார் 100 பவுண்டு எடை கூடின. வளர்ந்த டைனாசரின் எடையோ சுமார் 100 டன் இருந்திருக்கும் என அவர்கள் கணிக்கிறார்கள்.டைனாசர்களில் பறப்பவை எவை ?

"டீரோடாக்டில்" எனப்படுபவை பறக்கும் வல்லமை பெற்றிருந்தன. பார்ப்பதற்கு இவை "டீரோசாரஸ்" வகை டைனாசர்கள் போல் தோன்றினாலும், உண்மையில் இவைகள், டைனாசர் இனத்தை சேர்ந்தவை அல்ல என்பதே உண்மை. டைனாசர்கள் வாழ்ந்த சமகாலத்தில் இவைகளும் இருந்ததால், பறக்கும் ஊர்வனங்களாகிய "டீரோடாக்டில்" டைனாசர்களாகவே பாவிக்கப்பட்டன. முன்சரித்திர காலத்தில் வாழ்ந்த விலங்கான "ஆர்கியோப்டெரிக்ஸ்" பறக்கும் டைனாசராக கருதப்பட்டது. பறவைகள் போல் சிறகும், மரக்கிளையில் தொத்திக்கொள்ள ஏதுவாக முன்னங்கால்களும் இவைகள் பெற்றிருந்தன. இதே போல "ஆங்கியார்னிஸ்" ம் சிறகுகளுடன் காணப்பட்டன. ஆயினும் அச்சிறகுகள் கொண்டு அவைகள் பறந்தனவா அல்லது லேசாக காற்றில் மிதந்தனவா என்று விஞ்ஞானிகள் ஐயம் தெரிவிக்கிறார்கள்.


நீந்த தெரிந்த டைனாசர்கள் எவை


நிலத்தில் டைனாசர்கள் வாழ்ந்த அதே காலகட்டத்தில், கடலில் நீர்வாழ் ஊர்வனங்களும் கோலோச்சின. இவைகள் டைனாசர்கள் இனத்தை சார்ந்தவை அல்ல. "ப்ளெசியோசார்ஸ்", "நாதோசார்ஸ்", "மோசாசார்ஸ்", மற்றும் "இச்சைதோசார்ஸ்" என்று இவைகள் வகைப்பட்டன. உடலில் துடுப்புகளுடன் மீன்களை வேட்டையாடிய "ப்ளெசியோசார்ஸ்" நீர்வாழ் ஊர்வன இனத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது. டைனாசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த மற்றொரு நீர்வாழ் ஊர்வனம் முதலைகள் ஆகும். சில டைனாசர்கள் நீந்த கூடியவைகளாக இருந்தன என்று புதிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. முழுதும் நீர்வாழ் உயிரினமாக இல்லாமல், இறை தேடும் முயற்சியில் சில டைனாசர்கள் நீந்த பழகியிருக்கக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை ஆகும். உதாரணத்திற்கு "பார்யோனிக்ஸ்" என்ற டைனாசரின் எச்சத்தில் மீன்களின் எச்சமும் காணப்பட்டன. 
"ப்ளெசியோசார்ஸ்"


பல்லிகளை ஒத்த உருவம் கொண்ட "ப்ளெசியோசார்ஸ்" இரண்டு வகை பட்டன. பாம்புகள் போல நீண்ட கழுத்துடன் ஒன்றும், உடலை விட பெரிய தலையுடன் உறுதியான தாடை மற்றும் சிறிய அளவு கழுத்தும் கொண்ட ஒன்றும் என இரு வகையில் அவைகள் வாழ்ந்தன. இவைகள் "க்ரோனோசார்ஸ்" மற்றும் "எலாஸ்மோசார்ஸ்" என்றும் அழைக்கபட்டன.


"நாதோசார்ஸ்"

மீன் உண்டு வாழ்ந்த "நாதோசார்ஸ்" நான்கு எலும்பு கூடுகள் கொண்டவை ஆகும். "ட்ரையாசிக்" காலத்தை சேர்ந்த இவைகள் நீர் மற்றும் நிலம் இரண்டிலும் வாழ்ந்தன. ஆனால் உண்மையில் நன்கு நீந்தக்கூடிய இவைகள் டைனாசர் அல்ல என்பதே உண்மையாகும். உடல் மற்றும் கழுத்து நீளமாகவும், அகன்ற பாதங்களும் இவை பெற்றிருந்தன."நாத்தாசாரிடே" குடும்பத்தை சேர்ந்த இவை "நாதோசார்ஸ்", "லாரியோசார்ஸ்" மற்றும் "செரெசியோசார்ஸ்"  என்று வகைப்பட்டன.
"மோசாசார்ஸ்" (மோ- சா- சார்ஸ் என உச்சரிக்கவும் )


இவை ( ஹாலாந்தில் உள்ள "மெயூஸ்" நதிக்கரையில் முதன்முதலாக காணப்பட்டதால் "மெயூஸ் பல்லிகள்" என்ற பெயர் பெற்றன ) பெரிய உருவம் கொண்ட மாமிச உண்ணிகள் ஆகும். டைனாசர் இனத்தை சாராத இவைகள் கடைசி "க்ரெடேஷியஸ்" காலத்தில் வாழ்ந்து வந்தன. திறமையாக நீந்த கூடிய "மோசாசார்ஸ்" நீண்ட உடலில் துடுப்புகள் போன்ற நான்கு எலும்பு கூடுகள் பெற்றிருந்தன. அத்துடன் பெரிய தலைப்பகுதியும், நிறைய பற்களுடன் அமைந்த பெரிய தாடையும் பெற்றிருந்தன. மீன்கள், ஆமைகள் , ஒட்டுமீன்கள் போன்றவைகளை "மோசாசார்ஸ்" வேட்டையாடி உண்டன. வடக்கு அட்லான்டிக்கில் வாழ்ந்த சில "மோசாசார்ஸ்" 33 அடி உருவமும் கூரிய பற்களும் பெற்றவைகளாக இருந்தன. இவைகள் "மோசாசார்ஸ்" , "ப்ளாட்டிகார்பஸ்" "டைலோசார்ஸ்", "ப்ளெசியோசார்ஸ்", "க்ளிடாஸ்டஸ்", "ப்ளியோப்ளாட்டகார்ப்பஸ்" மற்றும் "க்ளாபிடென்ஸ்" (மீன்களை நசுக்கி உண்ண தட்டையான பற்கள் கொண்டவை) என்று வகைப்பட்டன.  "அரேநிசாரஸ்" எனும் கடலோரம் வாழ்ந்த டைனாசரின் எச்சத்தில் அவைகள் நீந்த ஏதுவாக உறுதியான எலும்புக்கூடுகள் காணப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதன்முதலில் கண்டறியபட்ட டைனாசர் எது ?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல டைனாசர்களின் எச்சங்கள் இதுவரை மக்களால் கண்டறிய  பட்டுள்ளது.


சீன மொழியில் "சாங் க்யூ" என்பவரால் எழுதபட்டுள்ள "வூசெங் சீசுவாங்" எனும் நூலில் "ட்ராகன்" எலும்புகள் 2000 ஆண்டுகள் முன்பு கண்டறியபபட்டது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அது டைனாசரின் எலும்பு என்பது தான் சாத்தியக்கூறு.

அதன் பின்பு 1676 ஆண்டில் "ரெவெரெண்ட் ப்ளாட்" என்பவர் இங்கிலாந்தில் ஒரு பெரிய தொடை எலும்பை கண்டுபிடித்தார். அப்போது அந்த எலும்பு ஏதோ ஒரு அரக்கனின் எலும்பு என்று கருதப்பட்டாலும், அதுவும் டைனாசரின் எலும்பே ஆகும். இது பற்றிய ஓர் அறிக்கை 1763 யில் ஆர்.ப்ரூக்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.

முதன்முதலில் 1824 ம் ஆண்டு, "மெகாலோசாரஸ்" எனும் டைனாசரின் எச்சங்கள் "வில்லியம் பக்லாண்டு" எனும் ஆங்கில எச்ச ஆராய்ச்சியாளரால் விஞ்ஞானபூர்வமாக விளக்கப்பட்டது. 1819 ம் ஆண்டில் அவர் இந்த டைனாசரின் எச்சங்களை கண்டுபிடித்து 1824 ல்  "மெகாலோசாரஸ்" எனும் பெயரிட்டார். இது தான் முறைப்படி விஞ்ஞானபூர்வமாக விளக்கப்பட்ட முதல் டைனாசர் ஆகும் (இதற்கு முன்பு டைனாசர் என்ற சொல்லே வழக்கத்தில் இல்லை )
அழிந்துபோன கடைசி டைனாசர் எது ?


சுமார் 175 கோடி ஆண்டுகள் டைனாசர்கள் இவ்வுலகில் வாழ்ந்தன. 65 கோடி ஆண்டுகள் முன்பு அந்த இனம் அழிந்து போனது. ஆயினும் எல்லா டைனாசர்களும் ஒரே காலத்தில் அழிந்துவிடவில்லை. டைனாசர்கள் அழிந்து கொண்டிருந்த காலத்தில் "டைரானோசாரஸ் ரெக்ஸ்" மற்றும் "ட்ரைசெராடாப்ஸ்" போன்ற நமக்கு நன்கு பரிச்சயமுள்ள டைனாசர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்தன. "ஆங்கிலோசாரஸ்" மற்றும் "ராப்டர்" வகையை சேர்ந்த சில டைனாசர்களும் அப்போது வாழ்ந்தன.

அந்த காலகட்டத்தில் பெரும்பாலான டைனாசர்கள் ஒழிந்து விட்டன. கடைசி டைனாசர் அழிந்து போன காலத்திற்கு பல கோடி ஆண்டுகள் முன்பே "ப்ராகியோசாரஸ்" மற்றும் "ஸ்டீகோசாரஸ்" போன்ற டைனாசர்கள் அழிந்து போயிருந்தன.அடுத்த பதிவில் டைனாசர்களின் சிறப்பம்சங்களை பற்றி அலசலாம் !


தொடரும் ......


டைனாசர் 1 - முதல் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 2 - இரண்டாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !

டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 6 - இறுதி பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !


கத்திரி உருளை மசாலா


கத்திரி உருளை மசாலா
Potato Brinjal Curry

சில சமயம் விருந்தாளிகள் வந்துவிட்டால் செய்யக் கூடிய ஒரு துரிதமான உணவு கத்திரி உருளை மசாலாவாகும். இதில் அடிப்படை காய்கரிகளான கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் முருங்கை உள்ளதால் எளிதில் செய்யக்கூடியதும், ருசியானதும் ஆகும். இதை சாதம் மற்றும் ரோட்டியுடன் ருசிக்கலாம்.தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு - 2
கத்திரிக்காய் - 4
முருங்கை - 1
பெரிய வெங்காயம் -
தக்காளி - 1 ; சின்னது
இஞ்சி பூண்டு பசை - 1 தேக்கரண்டி
சமையல் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள - 1 தேக்கரண்டி
மல்லி தூள - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி - அலங்கரிக்க 

செய்முறை விளக்கம் :

1)  உருளை மற்றும் கத்திரியை ஒரு இஞ்ச அகலமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முருங்கை இரண்டு இஞ்ச நீளமான துண்டுகளாக நறுக்கவும். 
2)  ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணையை சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

3)  கடுகு வெடித்ததும் சன்னமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பசை சேர்க்கவும் 

4)  அவை பொன்னிறமானதும், நறுக்கிய கைகறி கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்

5)  பிறகு மஞ்சள் தூள, மல்லி தூள, மிளகாய் தூள சேர்க்கவும்

6)  தேவையான உப்பு சேர்த்து, ஒரு கப் நீர் சேர்த்து கலக்கி, மூடி போட்டு சிறு தீயில் பத்து நிமிடம் சமைக்கவும்

7)  பிறகு சன்னமாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நீர் வரரும் வரை திறந்த படி சமைக்கவும்

8)  கொத்தமல்லி தூவி பரிமாறவும்


Tuesday, July 26, 2011

குறள் #2 வாய்மைபிரிவு : அறத்துப்பால் / துறவறவியல்
அதிகாரம் : 30 / வாய்மை 
குறள் எண் 293


குறள் #2 :

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும் 


தெளிவுரை :

ஒருவன் தன் மனம் அறிந்த ஒன்றை பிறர் அறியார் என மறைத்து பொய் கூறுதல் கூடாது. அங்ஙனம் பொய் கூறுவானாயின் அவன் மனமே அக்குற்றத்திற்கு சாட்சியாய் இருந்து அவனை வருத்தும்.
 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking