Social Icons

.

Sunday, January 5, 2014

இந்த கேள்விக்கு விடை தெரியுமா ?


' கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருக்கிறாரா ?  '
இந்த கேள்விக்கு விடை தெரியுமா உங்களுக்கு ? ஆம் என்றோ இல்லை என்றோ எவ்வாறு நிரூபிப்பீர்கள் ? கீழே உள்ள கதையை படியுங்கள் !

GOD IS NOW HERE
 ஒரு ரயில் பயணத்தில் பைபிள் படித்து கொண்டு இருந்த ஒருவரை , சக பயணியான ஒரு விஞ்ஞானி சதா பேச்சு கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். “அறிவியல் இத்தனை வளர்ச்சி அடைந்த பிறகும், நீங்கள் இன்னும் இந்த பைபிள், மதம், கடவுள் போன்ற பழங்கால மரபு சார்ந்த விடையங்களை நம்பி கொண்டு இருக்கின்றீர்களா? இன்றும் உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று கேலியாக பேசிய விஞ்ஞானி, தன்னுடைய முகவரி அட்டையை பைபிள் படித்து கொண்டு இருந்தவரிடம் கொடுத்தார். “தாங்கள் விரும்பினால், முன் அனுமதி பெற்று ஒரு முறை என்னை வந்து சந்தியுங்கள். வாழ்க்கை என்ன? அதை எவ்வாறு அறிவு பூர்வமாக அணுக வேண்டும் என்பதை உங்களுக்கு அறிவியல் ரீதியாக புரிய படுத்துகிறேன்” என்றார். அவரும் அமைதியாக விஞ்ஞானி கொடுத்த அட்டையை வாங்கி தன் பைபிளில் வைத்து கொண்டார்.

ரயில் பயண முடிவில் இறங்க தயாரான விஞ்ஞானி, "ஆமாம், நீங்கள் உங்களை பற்றி எதுவும் சொல்ல வில்லையே, உங்கள் பெயர் ?” என்று விசாரித்தார். பைபிள் படித்து கொண்டு இருந்தவர், “என் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்” என்று பணிவாக உரைத்தார்.

தன் சக பயணியானவர், அனைத்து கண்டுபிடிப்புகளின் தந்தை ( Who is considered as the father of all inventions ) என்று அறியப்பட்ட மேன்மை பொருந்திய விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை கேட்டு திடுக்கிட்ட விஞ்ஞானி, “ ஐயா, உங்களை வந்து சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கி தாருங்கள்” என்று கேட்டுக் கொள்ள, எடிசனும் செவ்வாய் கிழமை வந்து என்னை பாருங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்

குறிப்பிட்ட நாளன்று தாமஸ் ஆல்வா எடிசனின் அறிவியல் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்ற விஞ்ஞானி, அங்கு வைக்க பட்டு இருந்த சூரிய குடும்பத்தின் மாதிரியை ( Model of Solar System ) கண்டு வியந்து, “இதை செய்தது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?” என்று கேட்டார். ( இந்த சூரிய குடும்ப மாதிரி எந்திரம், இன்றும் எடிசனின் பொருட்காட்சியில் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது )

புன்னகை பூத்த எடிசன், "அதை யாரும் செய்யவில்லை, நேற்று இரவு அது இங்கு இல்லை, இன்று காலை தான் திடீர் என்று வந்தது” என்றார்

மேலும் ஆவல் அடைந்த விஞ்ஞானி, “ சார், நான் உண்மையாகவே கேட்கிறேன், இதை வடிவமைத்தது யார் ?” என்றார்.

எடிசன் மீண்டும், "நானும் உண்மையாக தான் சொல்கிறேன், நான் காலை வந்த போது திடீர் என்று இது இருந்தது” என்றார். பொறுமை இழந்த விஞ்ஞானி, “சார், யாரும் உருவாக்காமல் திடீர் என்று ஒன்று தானாக உருவாவது சாத்தியமில்லை என்பது நம் இருவருக்கும் நன்றாகவே தெரியும் “என்று சற்றே சினத்துடன் கூறினார்.

எடிசன் இப்போது அமைதியாக, “ உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள் அனைவரும், இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே தானாக தான் உருவானது என்று நம்பும் போது, ஒரு சிறிய கருவி தானாக உருவாவதும் சாத்தியம் தானே ?” என்று பொட்டில் அடித்தாற்போல் கேட்டார்.

"விளைவு என்று ஒன்று இருந்தால், காரணம் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும்". அதாவது, இந்த உலகில் எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் உண்டு. அந்த காரணத்திற்கு கர்த்தாவும் உண்டு.

படைப்பு என்று ஒன்று இருந்தால், படைத்தவன் என்று ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்கிற உண்மையை இவ்வாறு உணர்த்தினார் எடிசன்.  ரிக் வேதததில் சொல்வதை போல, "We don't know what it is.. But we know it is."

நீதி : 
நம்மை சுற்றி படைப்புகள் இருக்கும் போது படைத்தவன் இருந்தே ஆக வேண்டும் என்பது உண்மை தானே !

சூரிய குடும்பத்தின் ஒரு மாதிரி எந்திரம்.
எடிசனுடயது அல்ல !!

Wednesday, January 1, 2014

புத்தாண்டு தீர்மானங்கள் - 2014New Year Resolutions - 2014

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுகிறது. பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பின்பற்றி கொண்டாடப்படும் புத்தாண்டே குதூகலமாக அமையும். ஆங்கில புத்தாண்டில் பின்பற்றப்படும் சில பிரபலமான பழக்க வழக்கங்களில் முக்கியமானது, ‘ புத்தாண்டு தீர்மானம் எடுப்பது’ ஆகும். இதை ஆங்கிலத்தில் New Year Resolutions என்பர். இந்த பண்பாட்டை சிறிது ஆராய்வோமா ?
பிறக்க போகும் ஆண்டில் சில பொறுப்புகளை மக்கள் தமக்கு தாமே வகுத்து கொண்டு, அந்த இலக்கை அடைய பாடுபடுவதே புத்தாண்டு தீர்மானத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த மரபானது பண்டைய பாபிலோன் நாகரீகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். ஆண்டின்  முதல் நாள் நமக்கு எவ்வாறு அமைகிறதோ, அந்த யோகமே முழு ஆண்டும் தொடர்ந்து வரும் என்று முதல் முதலாக நம்பியவர்கள் பாபிலோனியர்களே. இந்த நம்பிக்கை சிறிதும் குறையாமல் இன்றும் பின்பற்றப் படுகிறது.

சில புகழ் பெற்ற தீர்மானங்கள் :
# நான் புகை பிடிப்பதை விட்டு விடுவேன்
# நான் குடிப்பதை நிறுத்திக் கொள்வேன்
# நான் உடற்பயிற்சி செய்து உடலை பேணி பாதுகாப்பேன்
# குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன்
# சோம்பேறிதனத்தை விடுப்பேன்
# கோபத்தை தவிர்ப்பேன்
# தான தர்மங்கள் செய்வேன்
# தேவையற்ற செலவுகள் செய்ய மாட்டேன்
# வருங்காலத்துக்காக சேமிப்பேன்

இவ்விதமாக உறுதி மொழி ஏற்பது என்பது எளிதானதாக இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. புத்தாண்டு முடிந்த சில நாட்களில் இந்த உறுதி மொழிகளும் காற்றில் பறந்து விடுகிறது

தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது ?
மக்கள் இந்த தீர்மானங்களை கண்டிப்பாக நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இது நமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்க்கும். எந்த ஒரு உறுதிமொழியை எடுக்கும் முன்பும், நம்முடைய சூழ்நிலையையும் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் நம்மால் அதை உறுதியுடன் நிறைவேற்றிட முடியும். தீர்மானத்தை அடைய சில யோசனைகள் இதோ  :

# முதலில் நீங்கள் கடந்த ஆண்டு எடுத்த உறுதி மொழி, அது தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்,  நீங்கள் செய்த தவறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
.
# நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை, உங்கள் நெருங்கிய உறவுகளிடமும், நட்பு வட்டாரத்திலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உங்கள் வார்த்தையை காப்பாற்ற வேண்டுமே என்ற ஒரு கட்டாயத்திற்க்காகவாவது நிச்சயமாக இதை பின்பற்ற தோன்றும்.

#  புத்தாண்டு தினத்தன்று மட்டும் வீராப்பாக தீர்மானத்தை பற்றி நினையாமல், அடுத்து வரும் நாட்களிலும் அடிக்கடி நினைத்து நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப் பட்டால், அதை ஒரு தாளில் எழுதி தங்களின் கண்ணுக்கு அடிக்கடி புலப்படுமாறு காட்சி படுத்தவும்.

# நம்முடைய தொடர் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் எனில், நம்மை நாமே பாராட்டி கொள்வதில் தவறில்லை. இதனால் தன்னம்பிக்கை இன்னும் பலப்படும்.

#  உறுதி மொழி எடுக்கும் போதே, ஏனோ தானோ என்றோ, மற்றவர்க்காகவோ, வேண்டா வெறுப்புடனோ எடுக்காமல் ஒரு பற்றுடன் ‘எனக்காக’, ‘என்னால்’ என்று தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்த பின்னர் ஆசையுடனும் காதலுடனும் முழு மனதுடன் அதை நிறைவேற்ற செயலாற்ற வேண்டும்.இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த வருடம், உங்கள் யாழ் இனிது சில தீர்மானங்களை கடைபிடிக்குமாறு தம் வாசகர்களை பரிந்துரைக்கிறது :

1) பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வோம் – நெகிழ்தாள் பொருள்களால் சுற்றுப்புற சூழலுக்கு பேராபத்து என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி எடுப்போம். இதை பற்றி ஒரு பதிவை யாழ் இனிதில் ஏற்கனவே எழுதியுள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும் >>> பிளாஸ்டிக் – தடை செய்.

2) பட்டாசு கொளுத்துவதை தவிர்ப்போம் – பட்டாசு வெடிப்பது நம் சந்தோஷத்திற்காக மட்டுமே. இதனால் சுற்று சூழலுக்கு கேடு தான் விளைகிறது. கந்தக புகை மனிதர்களை மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகளையும் பாதிக்கிறது. ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை ஏற்படுத்தி உலக அழிவிற்கு வழிகோலும் பட்டாசை மறப்போம். நம்முடன் தெரிந்தோ தெரியாமலோ இணைந்து விட்ட இந்த பட்டாசு கொளுத்தும் பழக்கத்தை, நம் எதிர்கால சந்ததியினர் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, அடியோடு துறப்போம்.

3) நம் நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிப்போம் – வெளி நாட்டில் தயாரிக்கப்படும் உணவு பொருள்கள், ஆடை அணிகலன்கள், நுகர்வோர் பொருள்கள் ஆகியவற்றை புறக்கணித்து நம் நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்போம். நம் தேசப்பிதா காந்தி அடிகள் குரல் கொடுத்த சுதேசி பொருள் புறக்கணிப்பு கொள்கையை பின்பற்றுவோம்.

4) சமூக நலத் தொண்டு செய்வோம்  - சமூக விழிப்புர்ணர்வு இயக்கங்களில் சேர்ந்து கொண்டு, ரத்த தானம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு உதவி, இலவச கல்வி அளித்தல் போன்ற பணிகளில் பங்கேற்போம்.

5)   ஆளுக்கொரு செடி வளர்ப்போம் – நம்மால் இயன்ற அளவில் சுற்று சூழல் மேன்மைக்கு உதவுமாறு ஆளுக்கொரு செடி வளர்க்க உறுதி எடுப்போம். முக்கியமாக, திருமணம், பிறந்த நாள் ஆகிய விழாக்களில் வேறு பரிசு பொருள்களை கொடுப்பதை தவிர்த்து, ஒரு செடியை பரிசளிக்கலாம்.

6) அன்பை நிலை நாட்டுவோம் - நம் குழந்தைகளின் பிறந்த நாளை படாடோபமாக உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடுவதை தவிர்த்து, ஏதேனும் அனாதை ஆசிரமத்தில் அல்லது முதியோர் இல்லத்தில் கொண்டாட உறுதி பூணுவோம். இவ்வாறு செய்வதால், ஆதரவற்றோரை மகிழ்ச்சி படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நல்லாசியை பெறும் பாக்கியமும் கிட்டுகிறது.

புத்தாண்டில் கிடைப்பதோ தன்னம்பிக்கை !
போராடி சூடுவோம் வெற்றி வாகை !!
இதனால் ஒளிவீசும் நம் வாழ்க்கை !!!


யாழ் இனிது வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking