Social Icons

.

Tuesday, August 30, 2011

இனிய ரமலான் வாழ்த்துக்கள் !



ரமலான் தின சிறப்புகள்



இஸ்லாமிய பெருமக்கள் வருடந்தோறும் பின்பற்றும் ஒரு சிறப்புமிக நிகழ்வு "ரமலான்" நோம்பு. மனித குலத்திற்கு என்றும் பொருந்தும் பல வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய "ரமலானை" பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.

1) நோம்பு என்பதை ஒரு கடமையாக ஒவ்வொரு இஸ்லாமியரும் கருத வேண்டும் என்று நபிகள் பெருமான் (ஸல்) கூறியுள்ளார். பசி துறத்தல், மத கோட்பாடு என்ற எந்த ஒரு நோக்கமும் நோம்பிருப்பதின் பின்னணி ஆகாது. இறைவன் கூற்றின் படி இறையச்சம் ஏற்படுவதற்காக மட்டும் தான் இந்த சடங்கு கடமையாக கருதப்படுகிறது. அல்லாஹ் கூறுகின்ற ஒரே காரணமும் இதுதான்.

2) மிராஜ் இரவில் அல்லாஹ்வை சந்தித்தார் நபிகள் நாயகம். அல்லாஹ் அவரிடம் "எனக்காக உங்கள் சமூகத்தார் வருடம் தோறும் நோம்பு நூர்க்க வேண்டும் என கட்டளை இட்டார். நபிகள் அச்சமடைந்தார். தனது சமூகத்திற்காக இறைஞ்சினார். 1 வருடத்தை இறைவன் 6 மாதமாக குறைத்தார். "எனது சமூகத்தாரால் இதை தாங்கி கொள்ள இயலாது" என நபிகள் மீண்டும் மன்றாடினார். 5,4,3 என இறுதியில் 1 மாதம் என்று இறைவன் கருணை புரிந்தார். 1 மாதம் நோம்பு என்று இவ்வாறு தான் முஸ்லிம்களுக்கு கடமையானது.

3) ஹிரா எனும் குகையில் நபிகள் தனிமையில் இறை தியானத்தில் மூழ்கி இருந்த போது தான் அவர் முன் வானவர் "ஜப்ரீல்" தோன்றி குர் ஆன் வேதத்தை ஓதினார் என கூறப்படுகிறது.

4) ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் திரு குர் ஆன் அருளப்பட்டதால்,  இம்மாதத்திற்கு தனி சிறப்பு அளிக்கப்படுகிறது.

5) ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு தான் ரமலான் நோம்பு கடமையாக்கப்பட்டது.



6) முந்தைய இறை தூதர்களாகிய "இப்ரஹிம் நபி, தாவூத் நபி, மூஸா நபி" ஆகியோருக்கும் ரமலான் மாதத்தில் தான் ஆகமங்களும் ,வேதங்களும் அருளப்பட்டன.

7) நோயாளிகள் மற்றும் பயணம் மேற்கொள்வோர் தவிர்த்து, வயது வந்த அனைவர் மீதும் நோம்பு கடமை ஆக்கப்பட்டிருக்கிறது.

8) அறிவு தேடலுக்கும், மெய்-ஞானத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையில் திரு குர் ஆனின் முதல் வசனம் "ஓதுவீராக" என அருளப்பட்டது.

9) ரமலான் மாத்தத்தின் ஓர் இரவில் குர் ஆன் அருளப்பட்டதால், அந்த புனித இரவு "லைலத்துல் கத்ர்" (மாட்சிமை மிக்க இரவு) என அழைக்கப்படுகிறது.

10) திரு குர் ஆனில், முப்பது பாகங்களும், 114 அத்தியாயங்களும், 6666 வசனங்களும் உள்ளன. ரமலான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகம் ஓதப்படுகிறது.




11) ரமலான் மாதத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்கு பல்மடங்கு நற்கூலி வழங்கப்படும் என நபிகள் அறிவித்துள்ளார்.

12) தூய ரமலானில் வசதி படைத்தவர்கள் "ஜகாத்" எனும் கட்டாய தர்மத்தை எளியோர்க்கு வழங்குதல் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

13) ஒருவரின் வருமானத்தில் செலவுகள் எல்லாம் போக, மிஞ்சி இருக்கும் தொகையில் இரண்டரை சதவிகிதம் தர்மத்திற்கு வழங்குதல் வேண்டும் என்ற கோட்பாடே "ஜகாத்" என்று அழைக்கப்படுகிறது.

14) இஸ்லாமியர்கள் தங்களிடம் உள்ள தங்கம், வெள்ளி, வணிக சரக்குகள், வாடகைக்கு விடப்பட்ட கட்டிடங்கள், வேளாண் பொருட்கள், கால் நடைகள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.

15) வசதி இருந்தும் ஜகாத் வழங்காதவர்கள் மறுமையில் கடும் தண்டனை பெறுவார்கள் என குர் ஆன் எச்சரித்துள்ளது.



16) ரமலானின் கடைசி 10 நாட்களில் "இஃதிகாப்" எனும் உயர் ஆன்மீக வழிபாடு பேணப்படுகிறது.

17) வீடு, தொழில், மனைவி, மக்கள் என உலகியல் காரியங்களிருந்து விடுபட்டு, 10 நாட்களும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவனை வழிபடுவதை "இஃதிகாப்" என்று அழைக்கிறார்கள்.

18) நபிகள் நாயகத்திற்கு மிகவும் பிடித்த உணவாக பேரீசம்பழம் இருந்தது. பல நாட்கள் அவர் இதையே உண்டு பசியாற்றினார். அதனால் தான் இதற்கு இஸ்லாமியர்கள் இடையில் இத்தனை மதிப்பு. நோம்பு துறந்த உடன் அருந்தும் உணவாக பேரீசம்பழம் கருதப்படுகிறது.

19) பணி நிமித்தமாக தங்கள் இல்லங்களுக்கு சென்று நோம்பு துறக்க இயலாதவர்களுக்காக தான் "இஃப்தார்" விருந்து அமைக்கப்பட்டது. தங்கள் பணி இடத்திற்கு அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு சென்று நோம்பு துறக்க இவ்விருந்து வசதியாக அமைந்தது.

20) "நோம்பாளிகள் மதிய நேரத்தில் உறங்குங்கள், அப்போது தான் இரவில் விழித்திருந்து தொழுகை நடத்த முடியும்" என நபிகள் பெருமான் கூறியுள்ளார்.



21) ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தொடங்கும் முதல் நாளில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

22) பெருநாள் சிறப்பு தொழுகைக்கு செல்லும் முன் "ஃபித்ரா" எனும் பெரு நாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிடல் வேண்டும்.

23) நோம்பு வைப்பதால் உடல் உஷ்ணம் உண்டாகிறது, அவ்வாறு உண்டாகும் உஷ்ணத்தை தணிக்கவே நோம்பு கஞ்சி கட்டாயமாக ரம்ஜானில் தயாரிக்கப்படுகிறது.

24) ரமலான் மாதம் முழுவதும் "தராவீஹ்" எனும் சிறப்பு தொழுகை நடை பெறுகிறது.

25) ரமலான் மாதம் முழுவதும் நோம்பிருப்பதை தவிர, மற்ற மாதங்களிலும் மூன்று நாட்கள் நோம்பிருப்பதை, குர் ஆன் வலியுறுத்துகிறது.


என் முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 

என் இனிய ரமலான் வாழ்த்துக்கள் !








Friday, August 19, 2011

பட்டாணி புலாவ் ( பீஸ் புலாவ் )




பட்டாணி புலாவ் ( பீஸ் புலாவ் )
Peas Pulao



பீஸ் புலாவ் என்பது பெர்சிய நளபாகத்தில் இருந்து, முகலாய மன்னர்களால் இந்தியாவிற்கு தருவிக்கப் பட்ட ஒரு நறுமணம் மிக்க உணவு வகை ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்த உணவு, இந்திய சமையல் அறைகளில் முதல் இடம் வகிக்கிறது. பாரம்பரிய உணவான இதை ஆட்டுக்கறி மற்றும் லவங்க பட்டை கரம் மசாலா பொருள்களை கொண்டு சமைப்பர். சைவ பிரியர்கள் கறியை தவிர்த்து பல காய்கறிகளையோ அல்லது பனீர், காளான் ஆகியவற்றையோ சேர்த்து விதவிதமாக உண்ணலாம்.

யாழ் இனிதின் வாசகர், தோழர் ராஜசேகர் கோரிக்கைக்கு இணங்க, அவர் கேட்ட பீஸ் புலாவின் ருசியான செய்முறை இதோ !

செய்பொருள்கள் :

தரமான பச்சரிசி - 1 கோப்பை

தண்ணீர் – 2 ½ கோப்பை

கெட்டியான தேங்காய் பால் - ½ கோப்பை

பச்சை பட்டாணி -  ½ கோப்பை

நெய் - 2 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி

கிராம்பு - 3

பட்டை - 1 இஞ்ச் அளவு

ஏலக்காய் -  1 ; நசுக்கியது 

பிரியாணி இலை - 1

அன்னாசி மொக்கு - 1

பூண்டு -  4 ; நீளவாக்கில் அரிந்தது

பெரிய வெங்காயம்  - 1 ; நீளவாக்கில் அரிந்தது

பச்சை மிளகாய் – 2 ; நீளவாக்கில் அரிந்தது

உப்பு - சுவைக்கேற்ப 


செய்முறை :

1.  அரிசியை நன்றாக கழுவி, தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2.  ஒரு குக்கரில் நெய் + எண்ணையை சுட வைக்கவும்.

3.  சூடானதும் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, மொக்கு மற்றும் ஏலக்காயை சேர்க்கவும்.

4.  சில நொடிகள் வறுத்துவிட்டு அரிந்த பூண்டு, வெங்கயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.

5.  வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.

6.  பட்டாணியை சேர்த்து சில நிமிடம் வதக்கி விட்டு, தணலை குறைத்து கொள்ளவும்.

7.  அரிசியிலிருந்து நீரை நன்கு வடித்துவிட்டு தாளித்த பொருள்களுடன் வறுக்கவும். அரிசி நன்கு காய்ந்து, பளபளப்பாக மாறும் வரை வறுக்கவும்.

8.  இப்போது நீரையும் தேங்காய் பாலையும் ஒன்றாக கலந்து குக்கரில் ஊற்றி நன்கு கலக்கவும். இரண்டையும் சேர்த்து தான் ஊற்ற வேண்டும். தேங்காய் பாலை அப்படியே கெட்டியாக ஊற்றினால், திரிந்து போகும் வாய்ப்பு அதிகம்.

9. இந்த கலவை கொதிநிலையை அடைந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடியால் மூடி விட்டு சமைக்கவும்.

10. 3 விசில்கள் வரவிட்டு, அடுப்பின் தீயை குறைத்து மீண்டும் 1 விசில் வரும்வரை (அ) அதிகபட்சம் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

9.  5 நிமிடங்கள் கழித்து நெய்யில் வதக்கிய முந்திரி பருப்பு மற்றும் திராட்சை தூவி அலங்கரித்து (விருப்பப்பட்டால்) பரிமாறவும்.


Thursday, August 18, 2011

குறள் # 8 - நட்பாராய்தல்



குறள் # 8

பிரிவு : பொருட்பால் / நட்பியல் 
அதிகாரம் : 80 / நட்பாராய்தல்
திருக்குறள் எண் : 791

நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின் 
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு.   

தெளிவுரை :

நட்பை விரும்பி மேற்கொள்பவருக்கு, ஒருவரோடு நட்பு செய்த பிறகு அவரை விடுதல் இயலாது. ஆதலால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கேடு தருவது வேறு இல்லை.

ஆங்கிலத்தில் :

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry.


Wednesday, August 17, 2011

டைனாசர் 6 - கடைசி மூச்சு


டைனாசர் 6 - கடைசி மூச்சு


Dinosaur 6 - Extinction

சில கோடி ஆண்டுகளுக்கு, முன் இந்த பூமியில் புழங்கிய ஒரு அரிய உயிரினத்தை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். இந்த பயணத்தில் பரிணாம வளர்ச்சி, அக்கால உயிர் கோட்பாடுகள், மற்றும் சுற்றுசூழல் பற்றிய தகவல்களை டைனாசர்களின் வாழ்க்கையுடன் இணைத்தே உங்களுக்கு பரிமாறினோம்.

இங்கு உங்களுடன் பகிரப்படும் பதிவு யாழ் இனிதில் டைனாசரின் இறுதிப் பயணமாகும். எங்களுடன் கை கோர்த்து டி-ரெக்ஸ், டிப்லோடாகஸ் போன்ற ராட்சத மிருகங்களின் வாழ்கையை அலசி பார்த்து அதில் உள்ள சுவாரசியங்களையும் திகில்களையும் ரசித்து பாராட்டிய உங்கள் எல்லோருக்கும் யாழ் இனிது பெரிதாக கடமை பட்டிருக்கிறது. இத்தொடரை முடித்து கொள்ளுவதில் எங்களுக்கும் மன வருத்தம் இருந்தாலும் எந்த ஒரு சகாப்தமும் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இதன் நிறைவு பகுதியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.



டைனாசர் இனம் ஏன் அழிந்து போனது ?

சுமார் 65 கோடி ஆண்டுகளுக்கு முன்னால், டைனாசர்கள் திடீரென்று இறந்து போயின (அழிந்து போனது அந்த உயிரினம்). எதனால் இவ்வாறு ஆனது என்று இது வரை உறுதியாக புலப்படவில்லை, பூமிக்கண்டத்தில் நிச்சயமாக ஏற்பட்ட ஏதோ பெரிய மாறுதல் இது நிகழ்ந்தது என வேண்டுமானால் அனுமானிக்கலாம்.

எந்த காரணத்தினால் டைனாசர்கள் அழிந்து போயின என்று யாருக்கும் உறுதியாக தெரியாவிட்டாலும், விஞ்ஞானிகள் சில தத்துவங்கள் மீது இன்னமும் ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள்.



அனுமானம் #1

இதன் படி, டைனாசர்கள் ஒரு கட்டதிற்கு மேல் வளர முடியாமல் போய்விட்டன. ஒரு காலகட்டத்தில் எல்லா உயிரினங்களும் பூமியின் தட்பவெப்பம்உணவு, இருப்பு மற்றும் எதிரிகளுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த மாறுதலை டைனாசரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டதால், அவை அழிந்து போயின.



அனுமானம் #2

இந்த கருத்தின் படி, பூமியின் மீது ஒரு பெரிய விண்கல் மோதி அதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பு டைனாசர்கள் வாழ்கையை முடிவுக்கு கொண்டு சென்றது. விண்கல் என்பது விண்வெளியில் இருந்து பூமியை வந்து மோதும் பெரிய அளவு பாறைகளை குறிக்கும். அவ்வாறு மோதிய பாறையால் பெரிய தூசி மண்டலம் ஏற்பட்டு, சூரிய ஒளியை அது மறைத்திருக்க கூடும், ஆகையால் பூமியில் உள்ள தாவரங்கள் அழிந்து போயிருக்க கூடும். அவ்வாறு தாவரங்கள் அழிந்து போனதால், பெரும்பான்மையான டைனாசர்கள் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு இறந்து போயின.



அனுமானம் #3

மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், ஒரு காலத்தில் பூமியில் பல எரிமலைகள் வெடித்திருக்கலாம். அவைகளின் குழம்புகளில் உள்ள அதீத சாம்பல் துகள்கள் மற்றும் நச்சு வாயு பூமியில் பரவி இருக்கலாம். அதனால் டைனாசர்கள் சுவாசிக்க தடை ஏற்பட்டு அவைகள் இறந்து போயிருக்கலாம்.



அனுமானம் #4

நடைமுறைக்கு மிக நெருங்கிய இந்த அனுமானமானது, பல டைனாசரின் முட்டைகள் வேறு மிருகங்களால் உண்ணப்பட்டு அதன் அடுத்த தலைமுறை அழிந்து போயிருக்கலாம் என புலப்பட வைக்கிறது. தந்திரம் மிகுந்த சில உயிரினங்கள் இரவில் டைனாசர்கள் உறங்கும் பொழுது அவற்றின் முட்டைகளை தின்றதாலும்  டைனாசர் இனம் வழக்கொழிந்து போயிருக்க கூடும்.



அனுமானம் #5

ஏதேனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு டைனாசர்கள் அழிந்து போயிருக்கலாமா ? இந்த கூற்றின் சாத்தியம் குறைவு தான், ஏனென்றால் டைனாசர்கள் வாழ்ந்த அதே காலகட்டத்தில், புழங்கிய பல உயிரினங்களும் அப்போது அழிந்து போயின என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. அவ்வாறு எல்லா உயிரினங்களும் ஒரே நோயினால் அழிந்திருக்க கூடும் என்று நம்புவதற்கு இல்லை.




எச்சங்கள் என்றால் என்ன ?

வெகு காலம் முன்பு வாழ்ந்து வந்த மிருகங்கள் மற்றும் தாவரங்களின் மிச்ச பகுதிகளை தான் விஞ்ஞானிகள் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள். பல கோடி ஆண்டுகள் முன்னரே பாறை வடிவமாக மாறிவிட்ட எலும்புகள், பற்கள், முட்டைகள் மற்றும் கால்தடங்கள் எச்சங்களின் பகுதிகள் ஆகும். "ஜோபாரியா" மற்றும் "ஜெனென்ஷியா" என அழைக்கப்படும் புதிய வகை டைனாசர்களின் எச்சங்கள் சமீபத்தில் ஆப்பிரிகாவில் கண்டெடுக்கப்பட்டன.



விஞ்ஞானிகள் எச்சங்களை எவ்வாறு கண்டு பிடிக்கிறார்கள் ?
எச்சங்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகும். ஏனென்றால், இவைகள் பூமியின் ஆழ்ந்த பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. காற்று மற்றும் நீரால் மண் மற்றும் பாறைகளின் மேற்பகுதி நீக்கப்பட்ட இடங்களில் தான் பெரும்பாலும் வல்லுநர்கள் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். இவ்வாறு கடல் அலைகளால் நீக்கப்பட்ட ஒரு பகுதியில் தான் விஞ்ஞானிகள் "லியலீனாசாரா" எனும் டைனாசரின் எச்சங்களை கண்டுபிடித்தார்கள். இதை கண்டுபிடித்த விஞ்ஞானியின் மகளின் பெயரால் அதற்கு "லியலீனாசாரா" என்று பெயர் வந்தது. அவர் புதல்வியை "டைனோ பெண்" என்று கூறினார்கள்.



டைனாசர்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளதா ?
டைனாசர்கள் மீண்டும் உயிர்த்தெழ எந்த வாய்ப்பும் இப்போது இல்லை என்பது தான் உண்மையாகும். இருப்பினும் விஞ்ஞானிகள் டைனாசர் எனும் இந்த ராட்சச உயிரினத்தின் எச்சங்கள் மூலம் மேலும் புதிய தகவல்களை அறிய இன்னமும் முயன்று கொண்டிருக்கிறார்கள். தற்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் டைனாசர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, அது நம் எல்லோரின் மனது.

முற்றும் ....

டைனாசர் தொடர் முடிந்து விட்டது. இறுக்கமான மனதை தளர்த்தி கொள்ள சில நகைச்சுவை படங்கள் இதோ .....







டைனாசர் 1 - முதல் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 2 - இரண்டாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 3 - மூன்றாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 4 - நான்காம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !
டைனாசர் 5 - ஐந்தாம் பகுதிக்கு செல்ல இங்கே சொடுக்கவும் !





அடுத்த தொடர் ????

வழக்கொழிந்து விட்ட உயிரினங்களை தொடர்ந்து மனிதன் தொலைத்து விட்ட உன்னத நாகரீகங்களை பற்றி அறிந்து கொள்வோம்.. விரைவில் எதிர் பாருங்கள் !




Tuesday, August 16, 2011

குறள் # 7 - அடக்கம் உடைமை



குறள் # 7

பிரிவு : அறத்துப்பால் / இல்லறவியல் 
அதிகாரம் : 13 / அடக்கம் உடைமை 
திருக்குறள் எண் : 124

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது 

தெளிவுரை :

எத்தகைய சூழ்நிலையிலும் அறநெறியில் இருந்து மாறுபடாமல் அடக்கம் உடையவனாய் வாழ்பவனது உயர்வு, மலையின் உயர்வை விட மேலானது.

ஆங்கிலத்தில் :

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.




 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking