எலுமிச்சை சாதம்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணமும் உணவின் உபயோகமும், மனிதர்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க பயன்படுகிறது. எலுமிச்சை பழத்தில் நிறைந்திருக்கும் சிட்ரிக் ஆசிட், களைப்பு போக்கியாகவும், கிருமி நாசினியாகவும், பசி ஊக்குவிப்பானாகவும் பணிபுரிகிறது. மணமும் குணமும் நிறைந்த எலுமிச்சை சாதம், அனைவரும் விரும்பத்தக்க ஒரு உணவாக வெற்றி நடை போடுகிறது !
தேவையான பொருள்கள் :
பச்சரிசி சாதம் - 1 கப் ; உதிரியாக வேக வைத்து வடித்தது
எலுமிச்சம் பழம் - 2 (அ) 3 ; சாறு பிழிந்தால் 6 தேக்கரண்டி அளவு
சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை வேர்க்கடலை - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 ; 1/2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு ; சன்னமாக நறுக்கியது
சிகப்பு பட்டை மிளகாய் - 1 ; பாதியாக வெட்டியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
தயாரிக்கும் முறை :
1) ஓரு அகன்ற வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகை தாளிக்கவும்.
2) அவை வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலையை சிவக்க வறுக்கவும்.
3) நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, காய்ந்த சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில நிமிடம் வறுக்கவும்.
4) பின்பு பெருங்காய தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்தவுடன் உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.
5) 5 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாற்றை அதில் ஊற்றவும்.
6) வேகவைத்த சாதத்தை அதனுடன் இணைத்து நன்கு கலக்கவும்.
7) ருசி பார்த்து, புளிப்பு சுவை குறைவாக இருந்தால், மிச்சம் இருக்கும் சாற்றை கலக்கவும்
8) கொத்தமல்லி தழை தூவி, அப்பளம், துவையல், தயிர் பச்சடி ஆகியவற்றுடன் பரிமாறவும்.
சுவைத்தாயிற்று...
ReplyDeleteசௌந்தர், கண்ணாலேயே சுவைத்து பார்த்ததற்கு நன்றி ! ஹா ஹா
ReplyDelete