Social Icons

.

Monday, May 30, 2011

அவியல்


அவியல்

அவியல் என்பது கேரள கரையோரம் பிறந்த ஆற்புதமான ஒரு துணைக்கறியாகும். எல்லா காய்கறிகளையும் மோரில் சமைக்கும் வித்தியாசமான இதன் செய்முறையால், அடையுடன் அருமையாக ருசிக்கிறது. மேலும் சாம்பார் சாதம், குழம்பு சாதத்துடனும் உண்ணலாம்.



தேவையான பொருள்கள் :

அனைத்து காய்கறிகளின் கலவை - 2 கப் ; 2 இன்ச் நீள விரல்களாக நறுக்கப்பட்டது.

( கேரட், உருளை, சக்கரை வள்ளிக்கிழங்கு, முருங்கை, பூசணி, புடலங்காய், முள்ளங்கி, வாழைக்காய், காராமணி காய், கொத்தவரங்காய், அவரைக்காய், கத்திரிக்காய், கருணைக் கிழங்கு ஆகிய காய்களை உபயோகிக்கலாம். விலக்க வேண்டியவைகள் வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் சேப்பங்கிழங்கு )

சின்ன வெங்காயம் - 4 ; உரித்தது
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4 
பச்சரிசி - 1 மேஜைக் கரண்டி ; 2-3 மணி நேரம் நீரில் ஊற வைத்தது
கெட்டி தயிர் - 1/2 கப் ; கடைந்தது
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப

சமைக்கும் முறை :

1) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கறிகாய்களை வைத்து 1/2 கப் நீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்

2) காய்கள் 3/4 பதம் வெந்ததும் இறக்கி விடவும். மசியும் அளவுக்கு வேக வேண்டாம்.

3) ஒரு மிக்சியில் சீரகம், பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும்.

4) பிறகு, அதனுடன் துருவிய தேங்காய், ஊற வைத்த அரிசி சேர்த்து சிறிது நீர் ஊற்றி அரைக்கவும்.

5) விழுதான பின், சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக 1 முறை சுற்றி எடுக்கவும்

6) வேக வைத்த காய் கலவையுடன் இந்த விழுதையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 7 நிமிடங்கள் சமைக்கவும்.

7) பிறகு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

8) தாளிப்பதற்கு, ஒரு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்க்கவும்

9) இதை அவியலுடன் சேர்த்து, நன்கு கலந்து விட்டு, 5 நிமிடம் சமைத்து பரிமாறவும்.


Saturday, May 28, 2011

காராமணி காய் பொரியல்



காராமணி காய் பொரியல்

காராமணி காய் அல்லது பச்சை காராமணி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் ருசிக்க ஒரு அருமையான துணை ஆகும்.



தேவையான பொருள்கள் :

காராமணி காய் – 2 கப், 1 இன்ச் துண்டுகளாக நறுக்கியது
பெரிய வெங்காயம்  – 1 ; சன்னமாக நறுக்கப்பட்டது
கிராம்பு – 1
பட்டை – ¼ இன்ச் துண்டு
இஞ்சி – ½ இன்ச் துண்டு
பூண்டு – 2 பல்; உரித்தது
சமையல் எண்ணெய் - 4 மேஜைக் கரண்டி
கடுகு - ¼ தேக்கரண்டி
உளுந்து - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – ¼ கப்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி இலை - கை அளவு

செய்முறை :

1) ஒரு மிக்ஸியில் கிராம்பு பட்டை, இஞ்சி பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்

2) ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்

3) கடுகு உளுந்தை தாளிக்கவும்

4) கடுகு வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்.

5) வெங்காயம் பொன்னிறம் ஆனதும், நாம் முதலில் தயாரித்த கொரகொரப்பான பசையை சேர்த்து வதக்கவும்

6) பச்சை வாசனை போக வதக்கியதும், நறுக்கிய காராமணி காயை சேர்க்கவும்.

7) 5 நிமிடம் எண்ணெயில் வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்

8) வதக்கிய படி மூடியை மூடி நடுத்தர தீயில் 5 நிமிடம் சமைக்கவும்

9) மறுபடியும் வதக்கி தீயை குறைத்து 5 நிமிடம் சமைக்கவும்

10) பின்னர், 1/2 கப் நீர் தெளித்து, வதக்கி விட்டு, மூடி போட்டு காய் வேகும் வரை சமைக்கவும்.

11) காய் வெந்து அனைத்து மசாலாக்களும் ஒன்றாக கலந்த பிறகு, பாக்கி இருக்கும் நீர் அனைத்தும் ஆவி ஆகும் வரை முழு தீயில் சமைக்கவும்.

12) இறுதியாக, துருவிய தேங்காய், கொத்தமல்லி தழை தூவி சூடாக பறிமாறவும் !

வறுத்த கோழி


வறுத்த கோழி

கோழி சூப் புடன் அருமையான ஆரம்ப உணவாக வறுத்த கோழி சாப்பிடலாம். இது சாம்பார் சாதம், ரஸம் மற்றும் தயிர் சாதத்தோடு ருசியாக இருக்கும்.



தேவையான பொருள்கள் :

கோழி துண்டுகள் - ½ கிலோ
இஞ்சி – 1 இன்ச் துண்டு
பூண்டு – 5 பல்; உரித்தது
கெட்டி தயிர் - ½ கப் ; கடைந்தது
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 ½ தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
கோழி மசாலா () கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
சன்னமாக நறுக்கப்பட்ட வெங்காயம் - அலங்கரிக்க
கொத்துமல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை :

1) கோழியை நன்கு கழுவவும். இஞ்சி பூண்டை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

2) ஒரு அகலமான கிண்ணத்தில் கோழித் துண்டுகள், இஞ்சி பூண்டு பசை, கடைந்த தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கோழி மசாலா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

3) பிறகு, ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை வைத்து, கொஞ்சமாக நீர் தெளித்து, மூடியால் மூடி, கோழி வேகும் வரை சமைக்கவும்.

4) கோழி வெந்தவுடன், மூடியை திறந்து மிச்சம் இருக்கும் நீர் எல்லாம் காயும் படி சமைக்க வேண்டும். கோழி மிகவும் வெந்து விடாமல் பார்த்து கொள்வது அவசியம். மசியும் அளவுக்கு வெந்து விட்டால், வறுப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.

5) கடைசியாக, மிளகு தூள் சேர்த்து, கோழி மசியாமல் நன்கு கிளறவும்.

6) இதை 30 நிமிடங்கள் ஆற விடவும். ஆற வைப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஏனென்றால், சூடான கோழியை வறுத்தால், மசிந்து விடுவதோடு சரியாக வறுபடாது.

7) ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றி, 3-4 கோழி துண்டுகளை அதில் வைத்து, திருப்பி திருப்பி நன்கு வறுத்து எடுக்கவும். இவ்வாறே மற்ற எல்லா துண்டுகளையும் பொறுமையாக வறுக்கவும்.

8) சன்னமாக நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்

கோழி க்ளியர் சூப்



கோழி க்ளியர் சூப்


கோழி க்ளியர் சூப் ஒரு சிறந்த பசி ஊக்குவிக்கும் ஆரம்ப உணவு மட்டும் இல்லாது ருசியானதும் சத்தானதும் கூட. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சமையல் முறை மற்ற முறைகளை விட வித்தியாசமானதால், இதை கண்டிப்பாக செய்து பார்க்குமாறு பரிந்துரைக்கிரேன்.


தேவையான பொருள்கள் :

கோழி  – 6 துண்டுகள்
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
கிராம்பு – 1 ; நசுக்கியது
பட்டை – ¼ இன்ச் துண்டு; நசுக்கியது
பிரியணி இலை - 1
பூண்டு – 1 தேக்கரண்டி; பொடிதாக நறுக்கியது
இஞ்சி – 1 தேக்கரண்டி; பொடிதாக நறுக்கியது
சிறிய பச்சை மிளகாய் - 1 ; பொடிதாக நறுக்கியது
சின்ன வெங்காயம் - 3 ; பொடிதாக நறுக்கியது
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
வெங்காய தாள் – 1 ; நறுக்கியது
கொத்துமல்லி இலை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

1) கோழியை நன்கு கழுவி நடுத்தர துண்டுகள் ஆக்கவும். சிறு மென்மையான எலும்புகளையும் உபயோகிக்கலாம். அவை நறுமணம் தருவதுடன் சத்தானதும் கூட.

2) ஒரு குக்கரில் வெண்ணெயை சூடாக்கி, கிரம்பு பட்டை மற்றும் பிரியாணி இலையை சேர்க்கவும்.

3) நன்கு வதக்கி விட்டு பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.

4) அதையும் வதக்கி கோழி துண்டுகளை சேர்த்து வறுக்கவும்.

5) சில நிமிடங்களுக்கு பிறகு, உப்பு மற்றும் 2 கப் நீர் சேர்க்கவும்

6) குக்கரை மூடி 3 விசில் அல்லது 10 நிமிடம் சமைக்கவும்

7) ப்ரஷர் முழுவதும் இறங்கியதும், அதை ஒரு வடி கட்டியில் வடிக்கவும்.

8) இந்த "கோழி வடி நீர்" உடன் கோழி துண்டுகைளய் மட்டும் சேர்க்கவும். இதனுடன் 3 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்

9) வடி நீர் கொதித்தவுடன் மிளகு தூள், வெங்காய தாள், மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

10) 2 நிமிடங்களுக்கு மேல் சமைக்க வேண்டாம். அடுப்பை அணைத்து விட்டு வறுத்த கோழி உடன் பரிமாறுங்கள்.

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking