Social Icons

.
Showing posts with label மண்ணின் மைந்தர். Show all posts
Showing posts with label மண்ணின் மைந்தர். Show all posts

Wednesday, November 7, 2012

சுமேரிய நாகரீகம்

 
கடந்த பதிவில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி அறிந்துகொண்டோம். நம் இந்திய துணைக்கண்டத்தில் செழித்தோங்கிய இந்த நாகரீகத்தை போலவே உலகின் மற்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் பல பல்வேறு நாகரீகங்களை தோற்றுவித்துக்கொண்டிருந்தனர்.
 
வாழ்வு, கலை, பிழைப்பு ,வீழ்ச்சி என அந்த நாகரீகளும் மனிதர்களுக்கு பெரும் பாடமாக அமைந்தன. அவ்வாறு அமைந்த நாகரீகங்களில் மிக முக்கிய இடம் பெற்ற ஒரு நாகரீக வளர்ச்சியை பற்றித்தான் இப்போது நாம் அறிந்துகொள்ள முற்படுகிறோம்.
 
ஆம்....இம்முறை சுமேரிய நாகரீகத்தை பற்றி அறிந்து கொள்வோமா நன்பர்களே ..... 
 
சுமேரிய நாகரீகம் - ஒரு சிறு குறிப்பு
செம்புக்காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசபடோமியா,  நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் சுமேரியா இருந்தது. இது "நாகரீக அரசர்களின் நிலம்" அல்லது "சொந்த நிலம்" என்றும் அழைக்கப்பட்டது.  சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது.
 
 
லகாஷ் நகரம் 
 
மூலம்
மத்திய கிழக்கில் தற்போதைய ஈராக் பகுதி அந்த காலத்தில் "செழுமையான பிறை" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வேட்டையாடி சேகரித்து வாழ்ந்த மக்கள், தோட்டங்களை வளர்க்க தொடங்கினர்.
கிமு 7000 ல் விவசாயம் தொடங்கியது, அதற்கு நிரந்தரமான வசிப்பு இன்றியமையாத தேவையாக இருந்ததது.
 
கிமு 4500 ல்"உபைடியன்" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்ட மக்கள், பாரசீக வளைகுடாவில் கலக்கும் டிக்ரிஸ் மற்றும் யுஃபரேடிஸ் நதிக்கரையோர நகரங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் சதுப்பு நிலங்களை செதுக்கி விவசாயம் மேற்கொண்டார்கள். இவ்வாறு அமைக்கபட்ட பகுதி "மெஸோபடாமியா" (கிரேக்க மொழியில் இரு நதிகளுக்கு இடைபட்ட பகுதி) என்று அழைக்க பெற்றது.
 
 
 
கிமு 4000ல் காஸ்பியன் கடல் பகுதியை சுற்றி வாழ்ந்து வந்த சுமேரியர்கள் மெஸோபடாமியாவை வந்தடைந்தனர்.கிமு 3800 வாக்கில் சுமேரியர்கள் தெற்கு மெஸோபடாமியாவை உபைடியன்களை நீக்கிவிட்டு ஆக்கிரமித்து கொண்டார்கள்.
உபைடியர்களை விட சுமேரியர்களின் வாழ்க்கை முறை மேம்பட்டதாக இருந்ததாலும், அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து போனதாலும் ஒரு நாகரீகமாக தோற்றம் பெற்றன. நகரம் என்ற சொல்லிலிருந்து நாகரீகம் எனும் சொல் பிறந்தது
 
வளர்ச்சி
சுமேரில் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைடியன்கள் விளங்கினர். வாழும் சூழலை தங்கள் வசமாக்கி கொண்டது தான் அவர்களின் மிகப்பெரிய சாதனையாக விளங்கியது. யுஃபரேட் பகுதியில் உள்ள தாழ் நிலங்களை காயவைத்து, வாய்க்கால்கள் வெட்டி தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் அந்நிலத்தை உபயோகபடுத்தி கொண்டார்கள். நில வளங்களை நன்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் முதன்முறையாக அவர்கள் உழுது விவசாயம் செய்தார்கள்.
 
 
சக்கரம் கண்டுபிடிப்பு 
 
நிலவளம் நிறைந்திருந்தாலும் கணிம மற்றும் உலோக வளங்கள் அங்கு குறைவாகவே தான் காணப்பட்டன, ஆகையால் அவர்கள் உலோகங்களை இறக்குமதி செய்தார்கள். உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாக படகுகள் வடிவைமைதார்கள்.பண்டமாற்று முறையையும் முதன்முதலில் அமல்படுத்தினார்கள்.ஏர் கலப்பைகள் கண்டுபிடிப்பை தொடர்ந்து சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சக்கரங்களின் உதவியால் மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள். குயவன் சக்கரமும் கண்டுபிடிக்கபட்டு பானைகள் செய்யப்பட்டன. சக்கரத்தின் உதவியால் 3000 அண்டுகள் முன்னரே அவர்களின் போக்குவரத்து இந்திய எல்லை வரையும் செவ்வனே நீண்டு சென்றது.
 
வாழ்க்கை முறை
சுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல்பட்டன என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு சுமேரிய நகரத்திற்கும் தனிபட்ட கடவுள் மற்றும் தனிபட்ட ஆளுனர்களும் அமைத்துகொண்டார்கள். ஆயினும் சுமேரிய தலைநகரமான "உர்"-இன் அரசனுக்கு தான் எல்லோரும் பொதுவாக காணிக்கைகள் செலுத்தினர்.
சுமேரியாவில் குறைந்தபட்சம் 12 நகரங்கள் தழைத்தோங்கின. தனித்தனியான சுவர்கள் அமைத்த நகரங்களாக அவை அமைந்தன.அவற்றில் "உர்" "உருக்""கிஷ்" மற்றும் "லகாஷ்" முக்கிய நகரங்களாக விளங்கின. 24000 வரை மக்கள் தொகை கொண்ட "உர்" சுமேரியாவின் மிக பெரிய நகரமாக கருதப்பட்டது. அங்கு முக்கிய கடவுளாக வணங்கபட்டது "நன்னா" என்றழைக்கபட்ட சந்திரன்.  70 அடி உயரம் கொண்ட கோபுரம் நன்னா கோவிலில் காணப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ராஜ கோபுரங்கள் அகழ்வாராய்ச்சியின் சாட்சியாக விளங்குகின்றன.
 
 இனன்னா தேவதை 
மெஸோபொடாமையாவின் மற்றுமொரு பெரு நகரமாகிய “உருக்”கில் 6 மைல் நீள பெருஞ்சுவர் ஒவ்வொரு 35 அடிகளில் பாதுகாப்பு கோபுரங்களுடன் கட்டபட்டது. நகரத்தின் மையத்தில் அந்நகரத்தின் கடவுளின் கோவில் இருந்தது. நகரத்தை சுற்றி தானியங்களின் விளைநிலங்கள், ஈச்சம்பழ தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் காணப்பட்டன.
 
 
ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் 
 
பொதுமக்கள், நிலச்சுவான்கள் மற்றும் அடிமைகள் என பல்வேறு மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். 90 விழுகாடு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். கோவில்களிலும் நிலச்சுவான்கள் வீடுகளில் அடிமைகள் பணிக்கு அமர்த்தபட்டனர்.  நெல்லிடித்தல் மற்றும் நெய்தல் போன்ற பொது வேலைகள் அவர்களுக்கு தரபட்டன.
 
சிறப்பம்சங்கள்
1)            “எரிடு” என்று அழைக்கபட்ட சுமேரிய நகரம் உலகின் முதல் வளர்ந்த நகரமாக விளங்கியது.  அந்நகரத்தில் மூன்று விதமான வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந்தன. மண் குடிசைகளில் வாழ்ந்த விவசாயிகள் , கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வந்த நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் நதியோர நிலங்களில் நாணல் குடிசைகள் அமைத்து வாழ்ந்த சுமேரியர்களின் முன்னோர்களாக கருதபட்ட மீன்பிடிக்கும் மக்கள் என மூன்று வித மக்களின் கலாச்சாரமும்  எரிடு நகரத்தில் காணப்பட்டன.
 
 

2)               புகழ்பெற்ற தலைவனாக கருதபட்ட கில்கமேஷ் வாழ்ந்த நகரமாக “உருக்” கருதப்பட்டது. அத்தலைவனை பற்றி உலகின் மிக பழமையான புத்தகமான "கில்கமேஷின் காவியம்" எனப்படும் நூலில் எழுதப்பட்டுள்ளது.
 
 
 
3)              தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி சுமேரியர்களின் எழுத்து வடிவம் தான் உலகின் முதல் எழுத்து வடிவமாகும். சித்திரங்கள் வடிவில் தோன்றி பின்பு எழுத்துக்கள் சுமேரியர்களால் கண்டுபிடிக்கபட்டு, தங்கள் வர்த்தக கணக்கிற்காக அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள். உலகம் அறிந்த முதல் இலக்கியம் அங்கு தான் தொடங்கியது. தன் கைவிரல்கள் பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற்கொண்டவர்கள் சுமேரியர்கள்.
 
 
 
 
4)             சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்த்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின. சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன
 
 
செப்பேடில் வான் சாஸ்திரம் 
 
 
மன்னர் ஆட்சி
ஒரு காலகட்டத்தில், சுமேரிய நிலபகுதிகள் கடல்நீரின் ஆதிக்கத்தில் மூழ்க தொடங்கின.  உப்பு படிந்த நிலங்களில் சுமேரியாவின் முக்கிய தொழிலான விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்களில் வாழ்க்கை தரம் மெதுவாக குறைய தொடங்கியது. இதனால் அவர்கள் பசி, உணவு தட்டுபாடு மற்றும் நோய்களால் பாதிக்கபட்டனர்.
 
பலவீனமான சுமேரியர்களை "சிமிடிக்" இன மக்கள் போர் மூலம் ஆக்கிரமித்து கொண்டனர்.  சிமிடிக் இன மன்னன் கிஷ் நகரத்தை ஆளதொடங்கினார். சிறந்த போர் தந்திரங்களை மேற்கொண்டு அவர் சுமேரியாவின் பெரும் பகுதியை தன்வசமாக்கினார். பின்பு சுமேரியவின் "நிப்புர்" நகர மன்னனை தோற்கடித்து நிப்புர் நகரத்தை ஆண்டார். அந்நகரத்தின் கடவுளாகிய "என்லில்" ஆசியினால் தான் தன் ஆட்சி அமைகிறது என்று அம்மன்னன் தீர்க்கமாக நம்பினார். பின்னாளில் அம்மன்னன் எல்லாம்வல்ல சார்கன் என அழைக்கபட்டார். மிக சிறந்த ஆட்சி புரிந்த சார்கன் மன்னரின் இறப்பிற்கு பின் அவர் சந்ததிகள் சுமேரியாவை ஆண்டுவந்தனர். 
 
 
மாமன்னன் சார்கோன்  
 
வீழ்ச்சி
சார்கன் மன்னரின் தலைமுறைகள் ஆட்சியின் முடிவில் சுமேரியாவை சுற்றியுள்ள மற்ற அரசாங்கங்கள் சுமேரியாவை தாக்கி சிதைக்க தொடங்கின.கிமு 1950 வரை சுமேரிய நாகரீக காலம் நிலைத்தது.
சுமேரிய நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுவபவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும்
 
1.சுமேரிய ராணுவத்தை சரியாக பராமரிக்க ஒரு சிறந்த தலைமை இல்லாதது.
2.சுமேரியாவை சுற்றியிருந்த கடல்களில் உப்பு தன்மை கூடியது
3.சுமேரிய விவசாய மக்கள் தங்கள் விளைநிலங்களை தரிசாகும் அளவுக்கு கைவிட்டது.
ஆக சுமேரிய நாகரீகம் ஒரு முடிவுக்கு வந்ததில் பெரும் பங்கு புற காரணிகள் என்று தோன்றினாலும் அந்த அஸ்தமனத்தின் வேர்கள் சமுதாயத்தின் உள்ளிருந்த பலவீனங்கள் என்றும் சொல்லலாம் நண்பர்களே.
 
 

Thursday, September 1, 2011

சிந்து சமவெளி நாகரீகம்



Indus Valley Civilisation 
சிந்து சமவெளி நாகரீகம்

வணக்கம் நண்பர்களே, டைனாசர் பற்றிய ஆறு தொடர் சங்கிலியில் எங்களுடன் கை கோர்த்து ஆதரித்தமைக்கு நன்றிகள்!. அழிந்து போன ஒரு உயிரினத்தை பற்றி விவரமாக அறிந்து கொண்டதை அடுத்து, மனித காலடி சுவடுகளை தரணியில் தேடலாம் வாருங்கள்.  வாழ்க்கையை முதல் முதலில் சரியாக அணுகிய பல உலக நாகரீகங்கள் இன்று நம் மத்தியில் இல்லை. ஆனாலும் அவர்கள் விட்டு சென்ற தடயங்களை தேடி அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் சிறு முயற்சி தான் இந்த தொடர். எப்போதும் போல் இதிலும் உங்கள் ஆதரவை கோரும் யாழ் இனிது !

 

பாரத நாட்டின் ஓங்கிய பல பெருமைகளுக்குள், உலக மக்களுக்கு நாம் கற்றுக் கொடுத்த நாகரீகமாகிய சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றிய தேடலோடு, இத்தொடரைத் துவங்குவோம்.

 

சிந்து சமவெளி நாகரீகம் - ஒரு சிறு குறிப்பு :

உலகத்திலேயே முதன் முதலில் தோன்றிய நாகரீகங்களில், மிகவும் பழமையானதும் மிகவும் சிறப்பானதுமாக கருதப் படுவது, சிந்து நதிக்கரையில் தோன்றிய இந்து சமவெளி நாகரீகமாகும். கட்டடக் கலைக்கும், நவ நாகரீக உலகத்திற்கும், எகிப்து மற்றும் மேசபொடமியா போன்ற மேற்கத்திய நாகரீகங்களுக்கும் சவாலாக அமைந்த சிந்து சமவெளி நாகரீகம், அதன் வாழ்கை முறைக்காக பலராலும் இன்றளவும் பாராட்டப் படுகிறது. தாங்கள் வாழ்ந்த காலத்தில் சிந்தனை மிகுந்த, புதுமையான உத்திகளை பயன்படுத்தி அவர்கள் மேற்கொண்ட கட்டுமான பணிகள் 5000 ஆண்டுகள் தாண்டியும், இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டும், இன்றளவும் எஞ்சி நிற்கின்றன. இதற்காகவே, சிந்து சமவெளி நாகரீகத்தை ' நாகரீகமான நாகரீகம்' என்ற பட்ட பெயரோடு அழைத்தால் மிகையாகாது.


மூலம் :

தற்காலத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியவின் பஞ்சாப் பகுதியில் இந்த நாகரீகம் தோன்றியது. இப்பகுதியில் சளைக்காமல் திரண்டு ஓடி, இவ்விடத்தை செழிப்பாக்கிய இந்து நதியையும், அதன் கிளைகளையும், நதிப் படுகையையும் சுற்றி இந்த நாகரீகம் வளர்ந்தது. சுமார் 12,60,000 சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவி இருந்ததால், இது உலகின் மிக பெரிய நாகரீகமாக போற்றப்படுகிறது.

 

கி.மு. 3000 ஆண்டு முதல் கி.மு. 1200 ஆண்டு வரை இந்த நாகரீகம் செழித்தோங்கி வளர்ந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. கி.மு. 2600 தொடங்கி கி.மு. 1900 வரை உள்ள காலகட்டத்தில் உச்ச நிலை அடைந்த இந்த நாகரீகம், மோகன்ஜெதாரோ, ஹரப்பா என்ற இரு பெரும் நகரங்களின் மூலம் கலாசாரம் கட்டடக் களை மற்றும் வாழ்க்கை முறையை பேணி வளர்த்தது.



வளர்ச்சி :


சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் வெகுவாக முன்னேறி காணப்பட்டனர். தங்கள் வாழ்விற்கும், வசதிக்கும் தேவையான அனைத்தும் சுற்றியுள்ள இயற்கை வளங்கள் மற்றும், நீர் நிலையின் மூலமாகவும் அவர்கள் நிறைவேற்றி கொண்டனர். உதாரணத்திற்கு தற்காலத்தில் நாம் வீடுகள் கட்ட பயன்படுத்தும் செங்கற்களை அவர்கள் அப்போதே உருவாக்க தொடங்கிவிட்டனர். மக்கள் குளிக்க வசதியாக "பெரும் குளியல்தொட்டி" ஆங்கிலத்தில் "க்ரேட் பாத்" என்கிற 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் உள்ள மாபெரும் நீச்சல் குளத்தை ஊரின் நடுவே உருவாக்கினார்கள். கனமான சுவர் மற்றும் உயர்ந்த கூறை வீடுகள் அவர்களை வெயில் காலத்தின் கடும் வெப்பத்திலிருந்து பெரிதும் காத்தன. குடும்பம் மற்றும் சுற்றுப்பட்டு மக்களுக்காக தனி தனி கிணறுகளும் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்பட்டன.





மொழியும் கலாச்சாரமும் :

சிந்து சமவெளி மக்கள் குறியீடுகள் நிறைந்த எழுத்துக்களை மொழியாக பயன்படுத்தினார்கள். கி.மு. 3300 தொடங்கி கி.மு 2800 க்கு இடையில்தான் அவர்கள் மொழியை பயன்படுத்த தொடங்கினார்கள் என வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. பானைகளை சுடுவதற்கு முன் அதன் அடி பகுதியில் தங்கள்  எழுத்துக்களை செதுக்கி வைத்தனர் அக்கால மக்கள்.



பலவித கலாச்சார வழக்கங்களை இந்து சமவெளி மக்கள் பின்பற்றினார்கள். விவசாயம் மட்டுமே தொழில் என இருக்க, நகை தொழிலிலும் அவர்கள் ஈடுபட்டனர். ஹரப்பாவில் வாழ்ந்து வந்த மக்கள் வான்சாத்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். கி.மு 23 ம் நூற்றாண்டு கண்ட அவர்கள் பொற்காலத்தில் தான், பஞ்சாங்கம் , நாட்குறிப்பு போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இசைக்கருவிகள் கண்டுபிடிக்கபடாத அந்த காலத்திலும், அவர்கள் முட்டை வடிவ "விசில்" (ஊதுகுழல்) களை கண்டுபிடித்தார்கள். இன்றளவிலும் அது போன்ற ஊதுகுழல்கள் பாகிஸ்தான் மற்றும்  வட கிழக்கு இந்தியாவின் கிராமங்களில் காணலாம். களிமண் சிற்பங்களும், பொம்மைகளும் அவர்களால் செய்யப்பட்டன. அப்போதே பீங்கான்,தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பாண்டங்கள் அவர்கள் மத்தியில் புழங்கின.




தங்க ஆபரணங்களும் அக்காலாத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்டன. செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள நகைகளை வீட்டின் நிலைக்கு அடியில் புதைத்து வைத்து பாதுகாத்தனர். நகைகளை இறந்தவர்களுடன் புதைத்துவிட்டு அடுத்த தலைமுறை அதை எடுத்து பயன்படுத்தும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது



பொருளாதாரம் :

சிந்து சமவெளி நாகரீகத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், வணிகமும் அவர்கள் காலத்தில் செழித்தது என கூறலாம். மெஸாபட்டோமியா, தென்னிந்தியா, மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களிலிருந்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களை தங்கள் விளைச்சலுக்கு பதிலாக அவர்கள் வியாபாரம் செய்தனர். ஆற்று வெள்ளத்திலிருந்து தங்கள் பயிர்களை காப்பாற்ற ஆற்றை ஒட்டி சுவர்கள் எழுப்பினார்கள் அக்கால மக்கள். விளை நிலங்களில் கோதுமை, பார்லீ, பட்டாணி மற்றும் பூசனி போன்றவற்றை அவர்கள் விளைவித்தார்கள்.  முதன்முதலில் ஆடைக்கு பயன்படுத்த பருத்தியை விளைவித்தது சிந்து சமவெளி மக்கள் தான் என கூறப்படுகிறது.



பலவித வளர்ப்பு பிராணிகளுக்கு இடையில் யானையையும் அதன் தந்தத்திற்காக அவர்கள் வளர்த்தனர். பணப்புழக்கம் இல்லாத அந்த காலத்தில் வணிகம் மற்றும் வரிகளுக்காக எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. 0.856 கிராம் எடையுள்ள எடைக்கல்லை தொடக்க எடையாக அவர்கள் பாவித்தனர்.



வீழ்ச்சி :

சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 4 காரணங்களை முன்வைக்கிறார்கள்.

1) அதீத வெள்ளம் வந்து, அவர்கள் பகுதிகளை சூழ்ந்து மூழ்கடித்தன.

2) மக்கள் தொகை நோய் மூலம் விரைவாக மற்றும் கணிசமாக குறைந்தது.

3) மக்கள் நம்பி இருந்த "சரஸ்வதி" ஆறு வற்ற தொடங்கி விட்டது.

4) ஆரியர்கள் படையெடுப்பினால் சிந்து சமவெளி நாகரீகம் சூறையாடப்பட்டு அழிந்து போனது.

இதில் 4 ம் காரணம் ஏற்றுக்கொள்ள இயலாது என வல்லுனர்கள் தற்போது நிரூபித்திருக்கிறார்கள். ஆக மேற்க்கூறிய 3 காரணங்களினால் அந்த நாகரீகம் அழிந்திருக்க கூடும் என அனுமானிக்கபடுகிறது.



இறுதியுரை :

சிந்து சமவெளி நாகரீகத்தை "நாகரீகம்" என அழைக்கலாமா என்பதில் பல்வேறு ஐயப்பாடுகள் உள்ளன. சாதி வாரியான இடுகாடுகள் அக்காலத்தில் இருந்ததற்கு சான்றுகள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளதால், இதை எப்படி "நாகரீகம்" என்று அழைப்பது என வாதங்கள் நிகழ்கின்றன.


சில ஆராய்ச்சியாளர்கள், இந்து சமவெளி காலத்தில் மாவட்ட வாரியான ஆட்சி காணப்படவில்லை என்றும், மக்களை ஆண்டது சில அரசர்கள் போன்ற தலைவர்களே என்றும் தங்கள் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

மனிதன் தற்போது மார்தட்டி கொள்ளும் பல நாகரீக வளர்ச்சிகள் சிந்து சமவெளி காலத்திலேயே தொடங்கிவிட்டன என்பது என்னவோ சான்றுகள் மூலம் வெளிப்படுகின்ற கண்கூடான உண்மையாகும். 


 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking