Social Icons

.

Wednesday, January 1, 2014

புத்தாண்டு தீர்மானங்கள் - 2014



New Year Resolutions - 2014

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுகிறது. பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பின்பற்றி கொண்டாடப்படும் புத்தாண்டே குதூகலமாக அமையும். ஆங்கில புத்தாண்டில் பின்பற்றப்படும் சில பிரபலமான பழக்க வழக்கங்களில் முக்கியமானது, ‘ புத்தாண்டு தீர்மானம் எடுப்பது’ ஆகும். இதை ஆங்கிலத்தில் New Year Resolutions என்பர். இந்த பண்பாட்டை சிறிது ஆராய்வோமா ?




பிறக்க போகும் ஆண்டில் சில பொறுப்புகளை மக்கள் தமக்கு தாமே வகுத்து கொண்டு, அந்த இலக்கை அடைய பாடுபடுவதே புத்தாண்டு தீர்மானத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த மரபானது பண்டைய பாபிலோன் நாகரீகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். ஆண்டின்  முதல் நாள் நமக்கு எவ்வாறு அமைகிறதோ, அந்த யோகமே முழு ஆண்டும் தொடர்ந்து வரும் என்று முதல் முதலாக நம்பியவர்கள் பாபிலோனியர்களே. இந்த நம்பிக்கை சிறிதும் குறையாமல் இன்றும் பின்பற்றப் படுகிறது.

சில புகழ் பெற்ற தீர்மானங்கள் :
# நான் புகை பிடிப்பதை விட்டு விடுவேன்
# நான் குடிப்பதை நிறுத்திக் கொள்வேன்
# நான் உடற்பயிற்சி செய்து உடலை பேணி பாதுகாப்பேன்
# குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன்
# சோம்பேறிதனத்தை விடுப்பேன்
# கோபத்தை தவிர்ப்பேன்
# தான தர்மங்கள் செய்வேன்
# தேவையற்ற செலவுகள் செய்ய மாட்டேன்
# வருங்காலத்துக்காக சேமிப்பேன்

இவ்விதமாக உறுதி மொழி ஏற்பது என்பது எளிதானதாக இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. புத்தாண்டு முடிந்த சில நாட்களில் இந்த உறுதி மொழிகளும் காற்றில் பறந்து விடுகிறது

தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது ?
மக்கள் இந்த தீர்மானங்களை கண்டிப்பாக நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இது நமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்க்கும். எந்த ஒரு உறுதிமொழியை எடுக்கும் முன்பும், நம்முடைய சூழ்நிலையையும் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் நம்மால் அதை உறுதியுடன் நிறைவேற்றிட முடியும். தீர்மானத்தை அடைய சில யோசனைகள் இதோ  :

# முதலில் நீங்கள் கடந்த ஆண்டு எடுத்த உறுதி மொழி, அது தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்,  நீங்கள் செய்த தவறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
.
# நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை, உங்கள் நெருங்கிய உறவுகளிடமும், நட்பு வட்டாரத்திலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உங்கள் வார்த்தையை காப்பாற்ற வேண்டுமே என்ற ஒரு கட்டாயத்திற்க்காகவாவது நிச்சயமாக இதை பின்பற்ற தோன்றும்.

#  புத்தாண்டு தினத்தன்று மட்டும் வீராப்பாக தீர்மானத்தை பற்றி நினையாமல், அடுத்து வரும் நாட்களிலும் அடிக்கடி நினைத்து நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப் பட்டால், அதை ஒரு தாளில் எழுதி தங்களின் கண்ணுக்கு அடிக்கடி புலப்படுமாறு காட்சி படுத்தவும்.

# நம்முடைய தொடர் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் எனில், நம்மை நாமே பாராட்டி கொள்வதில் தவறில்லை. இதனால் தன்னம்பிக்கை இன்னும் பலப்படும்.

#  உறுதி மொழி எடுக்கும் போதே, ஏனோ தானோ என்றோ, மற்றவர்க்காகவோ, வேண்டா வெறுப்புடனோ எடுக்காமல் ஒரு பற்றுடன் ‘எனக்காக’, ‘என்னால்’ என்று தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்த பின்னர் ஆசையுடனும் காதலுடனும் முழு மனதுடன் அதை நிறைவேற்ற செயலாற்ற வேண்டும்.



இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த வருடம், உங்கள் யாழ் இனிது சில தீர்மானங்களை கடைபிடிக்குமாறு தம் வாசகர்களை பரிந்துரைக்கிறது :

1) பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வோம் – நெகிழ்தாள் பொருள்களால் சுற்றுப்புற சூழலுக்கு பேராபத்து என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி எடுப்போம். இதை பற்றி ஒரு பதிவை யாழ் இனிதில் ஏற்கனவே எழுதியுள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும் >>> பிளாஸ்டிக் – தடை செய்.

2) பட்டாசு கொளுத்துவதை தவிர்ப்போம் – பட்டாசு வெடிப்பது நம் சந்தோஷத்திற்காக மட்டுமே. இதனால் சுற்று சூழலுக்கு கேடு தான் விளைகிறது. கந்தக புகை மனிதர்களை மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகளையும் பாதிக்கிறது. ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை ஏற்படுத்தி உலக அழிவிற்கு வழிகோலும் பட்டாசை மறப்போம். நம்முடன் தெரிந்தோ தெரியாமலோ இணைந்து விட்ட இந்த பட்டாசு கொளுத்தும் பழக்கத்தை, நம் எதிர்கால சந்ததியினர் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, அடியோடு துறப்போம்.

3) நம் நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிப்போம் – வெளி நாட்டில் தயாரிக்கப்படும் உணவு பொருள்கள், ஆடை அணிகலன்கள், நுகர்வோர் பொருள்கள் ஆகியவற்றை புறக்கணித்து நம் நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்போம். நம் தேசப்பிதா காந்தி அடிகள் குரல் கொடுத்த சுதேசி பொருள் புறக்கணிப்பு கொள்கையை பின்பற்றுவோம்.

4) சமூக நலத் தொண்டு செய்வோம்  - சமூக விழிப்புர்ணர்வு இயக்கங்களில் சேர்ந்து கொண்டு, ரத்த தானம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு உதவி, இலவச கல்வி அளித்தல் போன்ற பணிகளில் பங்கேற்போம்.

5)   ஆளுக்கொரு செடி வளர்ப்போம் – நம்மால் இயன்ற அளவில் சுற்று சூழல் மேன்மைக்கு உதவுமாறு ஆளுக்கொரு செடி வளர்க்க உறுதி எடுப்போம். முக்கியமாக, திருமணம், பிறந்த நாள் ஆகிய விழாக்களில் வேறு பரிசு பொருள்களை கொடுப்பதை தவிர்த்து, ஒரு செடியை பரிசளிக்கலாம்.

6) அன்பை நிலை நாட்டுவோம் - நம் குழந்தைகளின் பிறந்த நாளை படாடோபமாக உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடுவதை தவிர்த்து, ஏதேனும் அனாதை ஆசிரமத்தில் அல்லது முதியோர் இல்லத்தில் கொண்டாட உறுதி பூணுவோம். இவ்வாறு செய்வதால், ஆதரவற்றோரை மகிழ்ச்சி படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நல்லாசியை பெறும் பாக்கியமும் கிட்டுகிறது.

புத்தாண்டில் கிடைப்பதோ தன்னம்பிக்கை !
போராடி சூடுவோம் வெற்றி வாகை !!
இதனால் ஒளிவீசும் நம் வாழ்க்கை !!!


யாழ் இனிது வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

2 comments:

  1. புத்தாண்டில் கிடைப்பதோ தன்னம்பிக்கை !
    போராடி சூடுவோம் வெற்றி வாகை !!
    இதனால் ஒளிவீசும் நம் வாழ்க்கை !!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி... புத்தாண்டு தீர்மானங்கள் மிகவும் அருமை... கடைபிடிப்பதென தீர்மானித்து விட்டேன்....

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking