Social Icons

.

Sunday, January 5, 2014

இந்த கேள்விக்கு விடை தெரியுமா ?


' கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருக்கிறாரா ?  '
இந்த கேள்விக்கு விடை தெரியுமா உங்களுக்கு ? ஆம் என்றோ இல்லை என்றோ எவ்வாறு நிரூபிப்பீர்கள் ? கீழே உள்ள கதையை படியுங்கள் !

GOD IS NOW HERE
 ஒரு ரயில் பயணத்தில் பைபிள் படித்து கொண்டு இருந்த ஒருவரை , சக பயணியான ஒரு விஞ்ஞானி சதா பேச்சு கொடுத்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். “அறிவியல் இத்தனை வளர்ச்சி அடைந்த பிறகும், நீங்கள் இன்னும் இந்த பைபிள், மதம், கடவுள் போன்ற பழங்கால மரபு சார்ந்த விடையங்களை நம்பி கொண்டு இருக்கின்றீர்களா? இன்றும் உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பதற்கு எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று கேலியாக பேசிய விஞ்ஞானி, தன்னுடைய முகவரி அட்டையை பைபிள் படித்து கொண்டு இருந்தவரிடம் கொடுத்தார். “தாங்கள் விரும்பினால், முன் அனுமதி பெற்று ஒரு முறை என்னை வந்து சந்தியுங்கள். வாழ்க்கை என்ன? அதை எவ்வாறு அறிவு பூர்வமாக அணுக வேண்டும் என்பதை உங்களுக்கு அறிவியல் ரீதியாக புரிய படுத்துகிறேன்” என்றார். அவரும் அமைதியாக விஞ்ஞானி கொடுத்த அட்டையை வாங்கி தன் பைபிளில் வைத்து கொண்டார்.

ரயில் பயண முடிவில் இறங்க தயாரான விஞ்ஞானி, "ஆமாம், நீங்கள் உங்களை பற்றி எதுவும் சொல்ல வில்லையே, உங்கள் பெயர் ?” என்று விசாரித்தார். பைபிள் படித்து கொண்டு இருந்தவர், “என் பெயர் தாமஸ் ஆல்வா எடிசன்” என்று பணிவாக உரைத்தார்.

தன் சக பயணியானவர், அனைத்து கண்டுபிடிப்புகளின் தந்தை ( Who is considered as the father of all inventions ) என்று அறியப்பட்ட மேன்மை பொருந்திய விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை கேட்டு திடுக்கிட்ட விஞ்ஞானி, “ ஐயா, உங்களை வந்து சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கி தாருங்கள்” என்று கேட்டுக் கொள்ள, எடிசனும் செவ்வாய் கிழமை வந்து என்னை பாருங்கள் என்று சொல்லி விட்டு கிளம்பினார்

குறிப்பிட்ட நாளன்று தாமஸ் ஆல்வா எடிசனின் அறிவியல் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்ற விஞ்ஞானி, அங்கு வைக்க பட்டு இருந்த சூரிய குடும்பத்தின் மாதிரியை ( Model of Solar System ) கண்டு வியந்து, “இதை செய்தது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?” என்று கேட்டார். ( இந்த சூரிய குடும்ப மாதிரி எந்திரம், இன்றும் எடிசனின் பொருட்காட்சியில் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது )

புன்னகை பூத்த எடிசன், "அதை யாரும் செய்யவில்லை, நேற்று இரவு அது இங்கு இல்லை, இன்று காலை தான் திடீர் என்று வந்தது” என்றார்

மேலும் ஆவல் அடைந்த விஞ்ஞானி, “ சார், நான் உண்மையாகவே கேட்கிறேன், இதை வடிவமைத்தது யார் ?” என்றார்.

எடிசன் மீண்டும், "நானும் உண்மையாக தான் சொல்கிறேன், நான் காலை வந்த போது திடீர் என்று இது இருந்தது” என்றார். பொறுமை இழந்த விஞ்ஞானி, “சார், யாரும் உருவாக்காமல் திடீர் என்று ஒன்று தானாக உருவாவது சாத்தியமில்லை என்பது நம் இருவருக்கும் நன்றாகவே தெரியும் “என்று சற்றே சினத்துடன் கூறினார்.

எடிசன் இப்போது அமைதியாக, “ உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள் அனைவரும், இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே தானாக தான் உருவானது என்று நம்பும் போது, ஒரு சிறிய கருவி தானாக உருவாவதும் சாத்தியம் தானே ?” என்று பொட்டில் அடித்தாற்போல் கேட்டார்.

"விளைவு என்று ஒன்று இருந்தால், காரணம் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும்". அதாவது, இந்த உலகில் எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் உண்டு. அந்த காரணத்திற்கு கர்த்தாவும் உண்டு.

படைப்பு என்று ஒன்று இருந்தால், படைத்தவன் என்று ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்கிற உண்மையை இவ்வாறு உணர்த்தினார் எடிசன்.  ரிக் வேதததில் சொல்வதை போல, "We don't know what it is.. But we know it is."

நீதி : 
நம்மை சுற்றி படைப்புகள் இருக்கும் போது படைத்தவன் இருந்தே ஆக வேண்டும் என்பது உண்மை தானே !

சூரிய குடும்பத்தின் ஒரு மாதிரி எந்திரம்.
எடிசனுடயது அல்ல !!

Wednesday, January 1, 2014

புத்தாண்டு தீர்மானங்கள் - 2014



New Year Resolutions - 2014

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுகிறது. பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை பின்பற்றி கொண்டாடப்படும் புத்தாண்டே குதூகலமாக அமையும். ஆங்கில புத்தாண்டில் பின்பற்றப்படும் சில பிரபலமான பழக்க வழக்கங்களில் முக்கியமானது, ‘ புத்தாண்டு தீர்மானம் எடுப்பது’ ஆகும். இதை ஆங்கிலத்தில் New Year Resolutions என்பர். இந்த பண்பாட்டை சிறிது ஆராய்வோமா ?




பிறக்க போகும் ஆண்டில் சில பொறுப்புகளை மக்கள் தமக்கு தாமே வகுத்து கொண்டு, அந்த இலக்கை அடைய பாடுபடுவதே புத்தாண்டு தீர்மானத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இந்த மரபானது பண்டைய பாபிலோன் நாகரீகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். ஆண்டின்  முதல் நாள் நமக்கு எவ்வாறு அமைகிறதோ, அந்த யோகமே முழு ஆண்டும் தொடர்ந்து வரும் என்று முதல் முதலாக நம்பியவர்கள் பாபிலோனியர்களே. இந்த நம்பிக்கை சிறிதும் குறையாமல் இன்றும் பின்பற்றப் படுகிறது.

சில புகழ் பெற்ற தீர்மானங்கள் :
# நான் புகை பிடிப்பதை விட்டு விடுவேன்
# நான் குடிப்பதை நிறுத்திக் கொள்வேன்
# நான் உடற்பயிற்சி செய்து உடலை பேணி பாதுகாப்பேன்
# குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன்
# சோம்பேறிதனத்தை விடுப்பேன்
# கோபத்தை தவிர்ப்பேன்
# தான தர்மங்கள் செய்வேன்
# தேவையற்ற செலவுகள் செய்ய மாட்டேன்
# வருங்காலத்துக்காக சேமிப்பேன்

இவ்விதமாக உறுதி மொழி ஏற்பது என்பது எளிதானதாக இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. புத்தாண்டு முடிந்த சில நாட்களில் இந்த உறுதி மொழிகளும் காற்றில் பறந்து விடுகிறது

தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது ?
மக்கள் இந்த தீர்மானங்களை கண்டிப்பாக நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இது நமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்க்கும். எந்த ஒரு உறுதிமொழியை எடுக்கும் முன்பும், நம்முடைய சூழ்நிலையையும் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொண்டு செயல் பட்டால் நம்மால் அதை உறுதியுடன் நிறைவேற்றிட முடியும். தீர்மானத்தை அடைய சில யோசனைகள் இதோ  :

# முதலில் நீங்கள் கடந்த ஆண்டு எடுத்த உறுதி மொழி, அது தோல்வி அடைந்ததற்கான காரணங்கள்,  நீங்கள் செய்த தவறுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
.
# நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை, உங்கள் நெருங்கிய உறவுகளிடமும், நட்பு வட்டாரத்திலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், உங்கள் வார்த்தையை காப்பாற்ற வேண்டுமே என்ற ஒரு கட்டாயத்திற்க்காகவாவது நிச்சயமாக இதை பின்பற்ற தோன்றும்.

#  புத்தாண்டு தினத்தன்று மட்டும் வீராப்பாக தீர்மானத்தை பற்றி நினையாமல், அடுத்து வரும் நாட்களிலும் அடிக்கடி நினைத்து நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப் பட்டால், அதை ஒரு தாளில் எழுதி தங்களின் கண்ணுக்கு அடிக்கடி புலப்படுமாறு காட்சி படுத்தவும்.

# நம்முடைய தொடர் முயற்சியினால் முன்னேற்றம் ஏற்படும் எனில், நம்மை நாமே பாராட்டி கொள்வதில் தவறில்லை. இதனால் தன்னம்பிக்கை இன்னும் பலப்படும்.

#  உறுதி மொழி எடுக்கும் போதே, ஏனோ தானோ என்றோ, மற்றவர்க்காகவோ, வேண்டா வெறுப்புடனோ எடுக்காமல் ஒரு பற்றுடன் ‘எனக்காக’, ‘என்னால்’ என்று தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்த பின்னர் ஆசையுடனும் காதலுடனும் முழு மனதுடன் அதை நிறைவேற்ற செயலாற்ற வேண்டும்.



இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த வருடம், உங்கள் யாழ் இனிது சில தீர்மானங்களை கடைபிடிக்குமாறு தம் வாசகர்களை பரிந்துரைக்கிறது :

1) பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்வோம் – நெகிழ்தாள் பொருள்களால் சுற்றுப்புற சூழலுக்கு பேராபத்து என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி எடுப்போம். இதை பற்றி ஒரு பதிவை யாழ் இனிதில் ஏற்கனவே எழுதியுள்ளோம். அதை படிக்க இங்கே சொடுக்கவும் >>> பிளாஸ்டிக் – தடை செய்.

2) பட்டாசு கொளுத்துவதை தவிர்ப்போம் – பட்டாசு வெடிப்பது நம் சந்தோஷத்திற்காக மட்டுமே. இதனால் சுற்று சூழலுக்கு கேடு தான் விளைகிறது. கந்தக புகை மனிதர்களை மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகளையும் பாதிக்கிறது. ஒலி மாசு, காற்று மாசு ஆகியவற்றை ஏற்படுத்தி உலக அழிவிற்கு வழிகோலும் பட்டாசை மறப்போம். நம்முடன் தெரிந்தோ தெரியாமலோ இணைந்து விட்ட இந்த பட்டாசு கொளுத்தும் பழக்கத்தை, நம் எதிர்கால சந்ததியினர் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, அடியோடு துறப்போம்.

3) நம் நாட்டுத் தயாரிப்புகளை ஆதரிப்போம் – வெளி நாட்டில் தயாரிக்கப்படும் உணவு பொருள்கள், ஆடை அணிகலன்கள், நுகர்வோர் பொருள்கள் ஆகியவற்றை புறக்கணித்து நம் நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்போம். நம் தேசப்பிதா காந்தி அடிகள் குரல் கொடுத்த சுதேசி பொருள் புறக்கணிப்பு கொள்கையை பின்பற்றுவோம்.

4) சமூக நலத் தொண்டு செய்வோம்  - சமூக விழிப்புர்ணர்வு இயக்கங்களில் சேர்ந்து கொண்டு, ரத்த தானம், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு உதவி, இலவச கல்வி அளித்தல் போன்ற பணிகளில் பங்கேற்போம்.

5)   ஆளுக்கொரு செடி வளர்ப்போம் – நம்மால் இயன்ற அளவில் சுற்று சூழல் மேன்மைக்கு உதவுமாறு ஆளுக்கொரு செடி வளர்க்க உறுதி எடுப்போம். முக்கியமாக, திருமணம், பிறந்த நாள் ஆகிய விழாக்களில் வேறு பரிசு பொருள்களை கொடுப்பதை தவிர்த்து, ஒரு செடியை பரிசளிக்கலாம்.

6) அன்பை நிலை நாட்டுவோம் - நம் குழந்தைகளின் பிறந்த நாளை படாடோபமாக உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடுவதை தவிர்த்து, ஏதேனும் அனாதை ஆசிரமத்தில் அல்லது முதியோர் இல்லத்தில் கொண்டாட உறுதி பூணுவோம். இவ்வாறு செய்வதால், ஆதரவற்றோரை மகிழ்ச்சி படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நல்லாசியை பெறும் பாக்கியமும் கிட்டுகிறது.

புத்தாண்டில் கிடைப்பதோ தன்னம்பிக்கை !
போராடி சூடுவோம் வெற்றி வாகை !!
இதனால் ஒளிவீசும் நம் வாழ்க்கை !!!


யாழ் இனிது வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Thursday, December 26, 2013

ஃபெங் ஷூயி கலையை பழகுவது எப்படி ?


Tips on Feng Shui Practice

 
கலை மற்றும் விஞ்ஞானத்தில் மிக புராதனமான விளங்கும் ஃபெங் ஷூயியை பற்றி விரிவாக உரைக்கும் முன், ஒரு சில வார்த்தைகள் கூற விழைகிறோம்.


சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் இக்கலை உருவாக்கி வளர்க்கப்பட்டது. சீன மொழியில் ஃபெங் என்றால் காற்று ஷூயி என்றால் நீர் என்று அர்த்தம். ஆக ஃபெங்ஷூயி என்பது அமைக்க பெற்ற இடத்தில் இவ்விரு ஆக்க சக்திகளின் சமன்பட்ட வெளிப்பாடாகும். இதன் மூலம் நல்ல ஆரோக்கியமும் வளமான எதிர்காலமும் உருவாகும் என்பது இக்கலையின் அடிப்படை நம்பிக்கை.



இனி நாம் ஃபெங்ஷூயியில் பின்பற்றப்படும் ஐந்து முக்கிய வழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோமாக.



அசுத்தத்தை நீக்கு

##  நம் வீட்டில் கேள்வி கேப்பாரின்றி இறைந்து கிடக்கும் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துதல் மிக்க அவசியம் ஆகும். இதனால், வீடு பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பதுடன், சுத்தமாக இல்லையே என்று எண்ணி வாடும், தேவை இல்லாத தலைவலி நீங்கும்.

##  இதை அடிக்கடி செய்வதால், நம் உடல் எடையும் குறைந்து ஆரோக்கியம் கூடும்.


##  சுத்தமான வீடு தான் ராசியான வீடு என்று ஃபெங் ஷுயி கருதுகிறது.


##  உங்களுக்கு பிடிக்காத எந்த விஷயம் ஆனாலும், மறுபரிசீலனை செய்யாமல் நீக்கி விடவும்.


##  உடைந்த பொருள்கள், பழுது பார்த்து மீண்டும் உபயோகிக்கலாம் என்று எண்ணி சேமித்து வைத்துள்ள தேவை இல்லாத பொருள்கள், பழுது பார்த்தாலும் பிரயோஜனம் இல்லை என நீங்கள் கருதும் பொருள்கள்
ஆகியவற்றை கண்டிப்பாக நீக்க வேண்டும்.




இல்லத்தை
ஒளியூட்டு

## நம் இல்லத்தில் இயற்கை ஒளி படர நாம் என்ன வழி செய்தாலும், அது நம் மனதின் உற்சாகத்திற்கு உகந்ததாகும்.


##
  பகல் வேளையில் வீட்டினுள் இயற்கையான ஒளியும், அந்த ஒளியின் ஆற்றலும் நன்கு புகுமாறு கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வையுங்கள்.


##
  தங்கள் ரசனைக்கு ஏற்ற வண்ணங்களை கொண்டு இல்லத்தை அலங்கரியுங்கள்.


##
  தங்களுக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கும் நிறங்களை கொண்டு வீட்டின் உட்புற சுவர்களை பளிச்சிட செய்யுங்கள்.


##
  ஆனால் வெளிப்புற சுவர்களில் வண்ணம் பூசுகையில் மூன்று நிறங்களுக்கு மேல் பயன் படுத்தாதீர்கள்.




இயற்கையை போற்று

##  தங்களால் பராமரிக்க முடிந்த சீரிய செடிகளை வளருங்கள்.


##
  தாவரங்களை இயற்கை, வளர்ச்சி, ஆக்கத்திறன் மற்றும் காற்றை சுத்தீகரிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு நல்கும் ஒரு இனிய பெட்டகம் என்று கூறினால் அது மிகையில்லை .


##  இயற்கை
எப்போதும் நம் ஆக்கத்திறனை சீரமைத்து நம்மை முழுமை பெறச்செய்யும்  வல்லமை படைத்தது.


##
  வளர்ப்பு பிராணிகள் மற்றும் பறவைகளும் நாம் வளர்க்கலாம். ஏனென்றால் எந்த ஒரு உயிரோட்டமுள்ள ஜீவனும் நமக்கு ஜீவாதாரமான ஆக்கசக்தியை வழங்க முடியும் என்பது ஃபெங்ஷூயி கலையின் நம்பிக்கை ஆகும்




அறைகலன்களை சரியாக இடவமர்த்து

##  வீட்டின் நுழைவாயில் மூலம் தான்  நம் வாழ்க்கையில் நல் வாய்ப்புகள் வரும் என்று கருதப்படுகின்றது. ஆகையால் நம் வாசலில், ஊக்கம் அளிக்கும் விதமாக நல்ல வாசல் விரிப்பு, பச்சை நிற குடம் அல்லது அழகிய மலர்தொட்டி வைப்பது மிகவும் உகந்தது.


##
  வீட்டின் முக்கியமான கலன்களை அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து நுழைவாயில் பார்வையில் தெரியும் வண்ணம், ஆளுமை நிறைந்த பகுதியில் அமர்த்துங்கள்னால் வாசலுக்கு நேர் நோக்கி இருத்தல் வேண்டாம்.


##
  கூர்மையான கோணங்கள் தீய சக்தியை உருவாக்கும்.  ஆகையால் உங்களை நோக்கி ஏதேனும் கூரிய பகுதி அமைக்கபெற்றால் அதன் நுனி உங்கள் மீது தீய சக்தியை செலுத்தும் என்பது ஒரு ஃபெங்ஷூயி நம்பிக்கை.


##  உங்கள்
படுக்கை அறையிலிருந்து டிவி, கணிப்பொறி ஆகிய மின் சாதனங்களை நீக்கிவிடுங்கள்.




சாக்கடைகளை பராமரி

##  வீட்டின் சாக்கடை வடிகால் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். அதன் மூலமாக தான் வீட்டின் அனைத்து அசுத்த தீய சக்திகள் விலகுகின்றன.


##
  அதேபோல் கழிவுதொட்டியை திறந்த வண்ணம் வைத்திருந்தால் இல்லத்தின் ஆக்கசக்திகள் அதன் மூலம் வெளியேறி விடும்.


##
  படுக்கை அறையை ஒட்டி அமைந்துள்ள கழிவறையின் கதவுகள் எப்போதும் , குறிப்பாக இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் படுக்கை அறையின் ஆக்க சக்தியை கழிவறையின் தீய சக்தியிலிருந்து பிரித்து வைத்திருக்க முடியும்.




எல்லாவற்றிற்கும்
மேலாக தங்களை ஊக்க சிந்தனையின் ஒளியுடன் எப்போதும் வைத்திருங்கள். அவ்வாறு இருத்தல் உங்களை மட்டும் அல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்து துன்பங்களை அகற்றும். உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றுவதை மட்டுமே செய்யுங்கள்.



ஃபெங்ஷூயி என்பது ஒரு மாய வித்தை அல்ல. அது உங்கள் செல்வம், அறிவாற்றல் மற்றும் நேரத்தை சமசீராக மாற்ற உதவும் ஒரு சிறிய முதலீடாகும். ஃபெங்ஷூயி கலையை பழகி பாருங்கள். ஒரு சிறிய திருத்தம் பல வலிய மாற்றங்களை அளிக்க முடியும் என்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.




 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking