Social Icons

.

Thursday, September 29, 2011

ஒன்பது இரவுகள் - ஒப்பிலா தகவல்கள்



ஒன்பது இரவுகள்ஒப்பிலா தகவல்கள்

நவராத்திரி என்றால் என்ன ?

விஞ்ஞான தத்துவங்கள் கோலோச்சும் தற்காலத்திற்கு வெகு முன்னமே இந்திய பண்டிகைகள் நிலைநிறுத்திய மெய்ஞ்ஞானம் அற்புதாமானவை.
அப்படிப்பட்ட ஒரு பண்டிகையான நவராத்திரியை பற்றி தெரிந்து கொள்வோமா தோழர்களே !

சக்தி என்பது அழிவில்லாத ஒன்றாகும், அதை உருவாக்கவோ, அழிக்கவோ இயலாது, எப்போதும் அது நிலைத்து இருக்கும் என்ற விஞ்ஞான தத்துவம் நவராத்திரி எனப்படும் சக்தி வழிபாடு மூலம் நிலைநிறுத்தப்படுவதே இப்பண்டிகையின் பின்புலமாகும். "துர்க்கை" என்றால் தீய சக்தியிலிருந்து நம்மை காப்பவள் என்று பொருள். நம்மில் ஒளிந்திருக்கும் நற்சக்தியை தூண்டி எழுப்பும் முயற்சி தான் நவராத்திரி தத்துவம்.



ஏன் சக்தி வழிபாடு ?

கடவுளை இறைவன் என்று ஆண்பால் கொண்டு அழைக்கும்போது, ஏன் அம்மனை கொண்டாடுகிறோம் என நாம் ஐயம் கொள்ளலாம். காத்தல், பேணுதல்,  நல்வழி படுத்துதல் என இறைவனின் பல செயல்கள் தாய்மையை தான் சித்தரிக்கின்றன. குழந்தை தன் தாயில் இந்த குணங்களை காண்பதால் இறைவனின் இந்த தாயம்சத்தை போற்றவே நவராத்திரி விழா சக்தி வழிபாடாக விளங்குகிறது.



ஏன் வருடத்திற்கு இரண்டு முறை நவராத்திரி கொண்டாடப்படுகிறது ?

இந்திய நாட்டை பொருத்தவரை கோடையின் தொடக்கமும், குளிர்வாடையின் தொடக்கமும் சீதோஷணம் மற்றும் சூரியனின் ஆதிக்க சக்தியையும் நிர்ணயிக்கிறது. ஆகையால் இந்த இரு காலத்திலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மேலும் வேறு இரண்டு விளக்கமும் உண்டு

) பருவ மாற்றத்தின் போது நம் பூமி சூரியனின் மூலம் அதற்குண்டான ஒளியும் வெப்பமும் பெறுகிறது, இதை நன்றியோடு நினைக்கும் வண்ணம்.

இந்த பருவ மாற்றத்தால், நம் உடலில் மற்றும் மனதில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை சரி விகிதமாக காக்க வேண்டியும் அம்பாளை வணங்குகிறோம்.



ஒன்பது இரவுகள் என்ன கணக்கு ?

மூன்று பிரிவாக நவராத்திரி விழா பிரிக்கப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் நல்வாழ்வின் தேவைகளான கல்வி, செல்வம்,வீரம் ஆகியவற்றில் துன்பத்தை எதிர்கொள்ளும் சக்தியை வேண்டி துர்க்கை அம்மனை வணங்கும் நாட்களாகும்.

அடுத்த மூன்று தினங்கள் நம் தேவைகள் அனைத்திற்கும் உதவும் செல்வம் வழங்கும் திருமகள் ஆகிய லக்ஷ்மி தேவியை வணங்கி அவள் ஆசி பெறும் நாட்களாகும்.

கடைசி மூன்று நாட்கள் நாம் பெற்ற வீரம் மற்றும் செல்வத்தை நல்முறையில் செலுத்த உதவும் கல்வியை அருளும் கலைமகள் எனும் சரஸ்வதியை போற்றி கொண்டாடும் தினங்களாகும்.

ஆக வாழ்வியல் தத்துவங்களை நம் பெரியோர்கள் நவராத்திரி போன்ற விழாக்கள் மூலம் நமக்கு அளித்திருக்கிறார்கள் என்பது ஐயம் இல்லாத ஒன்றாகும்.



நாம் அறிந்திராத சில நவராத்திரி தகவல்கள் ;

1)  ஷரத் நவராத்திரி, வசந்த் நவராத்திரி மற்றும் ஆஷாட் நவராத்திரி என நவராத்திரி மூன்றாக பிரிக்கப்படுகிறது.

2)  செப்டம்பர் - அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி முதன்மையானதாகும்.

3)  துர்க்கையால் வதம் செய்யப்பட்ட மஹிஷாசுரன் வதத்தை ஒட்டி ஷரத் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.



4)  மார்ச்-ஏப்ரல் மாதத்தில் வரும் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவதால் அதை வசந்த் நவராத்திரி அன்று அழைக்கிறோம். இது பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் விழாவாகும்.

5)  ஹிமாச்சல் பிரதேசத்தில் "ஆஷாட்"என்று அழைக்கப்படும் மழை பருவத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட் னவராத்திரி ஆகும். ஜூலை - ஆகஸ்ட் மாதம் இந்த கொண்டாட்டம் பின்பற்றப்படுகிறது.

6)  சக்தியின் ஒன்பது வடிவமானது துர்கா, பத்ரகாளி, ஜகதம்பா,   அன்னபூர்ணா, சர்வமங்களா, பைரவி, சண்டிகா, லலிதா, பவானி மற்றும் மூகாம்பிகா என்று போற்றப்படுகிறது.







7)  நவராத்திரி விழாவின் தேதிகள் நிலவு பஞ்ஞாங்கத்தின் அடிப்படையில் குறிக்கப்படுகின்றதுஅஷ்வின் மாதத்தில் பிறை தோன்றும் முதல் நாளான "பிரதிபாத" நாளில் இவ்விழா தொடங்குகிறது.

8)  ஒன்பது  நாளின் முடிவில் வரும் பத்தாம் நாளை "விஜயதசமி" அல்லது "தஷரா" என்று கொண்டாடி நவராத்திரி விழா செவ்வனே நிறைவு பெறுகிறது.





Sunday, September 11, 2011

பொய்மையும் வாய்மையிடத்து .......



பொய்மையும் வாய்மையிடத்து .......

அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார். அப்போது சில மனிதர்கள் ஒரு முதியவரை ரத்தவிளாறாக அடித்துக்கொண்டிருந்தார்கள். பீர்பால் வேகமாக எல்லோரையும் விலக்கி வைத்தார். அந்த முதியவரிடம் நடந்ததை பற்றி விசாரித்தார்.

அந்த முதியவர் " ஐயா, நான் ஒரு ஜோசியன், என் தொழிலுக்கு விரோதமாக என்றைக்கும் நடந்ததில்லை. சற்று முன் ஒரு ஜமீன்தார் தன் கைகளை என்னிடம் காண்பித்து பலன் கூற சொன்னார். அவர் ராசியின் படி, அவருடைய சொந்தங்கள் எல்லாம் அவர் கண் முன்னேயே தங்கள் ஆயுளை முடிப்பார்கள் என அவர் விதி அமைக்க பட்டிருக்கிறது. ஆகையால் நானும் அவ்வாறே அவரிடம் எடுத்துரைத்தேன். அதனால் பெரும் சினம் கொண்ட ஜமீன்தார் தன் ஆட்களை கொண்டு என்னை இப்படி அடித்து உதைத்து விரட்டி விட்டார்" என்று பீர்பாலிடம் கூறினார்.

சற்று யோசித்த பீர்பால் அந்த ஜோசியரின் காதில் அறிவுரை கூறினார்.

ஒரு வாரத்திற்கு பின், அந்த ஜோசியர் மீண்டும் அதே ஜமீன்தாரிடம் ஒரு மாறுவேடம் பூண்டு சென்றார். இந்த முறை அவர் முகம் கொள்ளாத சிரிப்புடனும் கை நிறைய பொற்காசுகளுடனும் வந்தார்.

பீர்பாலின் நண்பருக்கு ஒரே அதிசயம் " என்ன பீர்பால் ? பாவம் அவர் கொள்கையை மீறி அவரை பொய்யான பலன்கள் கூற வைத்துவிட்டாயா ?" என வினவினார். அதற்கு பீர்பால் "இல்லை நண்பா ! இம்முறையும் அவர் உண்மையைத்தான் கூறினார்" என்றார்.

"அது எப்படியப்பா சாத்தியம் ? சென்ற வாரம் கூறிய அதே பலனை கூறி அடி வாங்கிய அவர் எப்படி இவ்வாரம் அதையே கூறி பரிசு பெற முடியும் ? "

பீர்பால் பெரும் சிரிப்புடன் "ஹா..ஹா...! நண்பா கடந்த வாரம் அவர் என்ன சொன்னார் ? உங்கள் கண் முன்னரே உங்கள் சொந்தங்கள் அனைத்தும் தன் ஆயுளை இழக்கும் என கூறினார் அல்லவா ? அதே உண்மையை இம்முறை - உங்கள் சொந்தங்கள் மத்தியில் நீங்கள் தான் அதிக காலம் வாழ்வீர்கள் - எனவும் கூறலாம் அல்லவா ? ஹா...ஹா....ஹா....."

நண்பரும் பீர்பாலின் மதியூகத்தை எண்ணி வியந்து போனார்.

நீதி : உண்மை என்பது ஒரு கசப்பு மருந்து தான். ஆயினும், தேன் தடவி மருந்து ஊட்டினால் அது சரியாகவும் இறங்கும். அதன் பலனும் கிட்டும்.




Friday, September 9, 2011

அட பிரதமன் .....


அட பிரதமன்

கேரளக் கரையோரம் செய்யப்படும் பாயச வகைகளில் ஒன்று அட பிரதமன் ஆகும். 'அட' என்றால் அரிசி மாவு துண்டுகளையும்,  'பிரதமன்' என்றால் அவ்வரிசி துண்டுகள் சேர்க்கப்படும் இனிப்பு சுவை மிகுந்த தேங்காய் பாலையும் குறிக்கும். பிரதமன் என்றால் 'முதன்மை' என்பதையும் குறிப்பதால்பாயாசங்களில் முதல் இடத்தை இது வகிக்கிறது. கேரள இல்லங்களின் அனைத்து விழாக்களிலும் இது முக்கியமாக சமைக்க படுகிறது. இதன் திவ்யமான சுவை, உண்போர் மனதை கொள்ளை கொள்கிறது. முக்கியமாக, ஓணப்  பண்டிகையின் 'ஓண சந்த்யா' வேளையில் இது படைக்கப் படுகிறது !



தேவையான பொருள்கள் :

அட மாவு தயாரிக்க :
அரிசி – 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
சுடு நீர் - தேவையான அளவு
வாழையிலை - தேவையான அளவு

பிரதமன் தயாரிக்க :

தேங்காய் - 1 ; துருவியது
பாகு வெல்லம் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் பல் – 1/4 கப்
வறுத்த முந்திரி - அலங்கரிக்க

செய்முறை :

அட மாவு தயாரிக்க :
வழிமுறை 1 ( பாரம்பரிய முறை )
**  அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நன்கு வடிகட்டி, 2 மணி நேரமாவது நிழலில் உலர்த்த வேண்டும்.

**  பின்பு மிக்ஸியில் இட்டு மெல்லிய பொடியாக அரைத்து, ஒரு சல்லடையில் இட்டு நன்கு சலிக்க வேண்டும்.

**  பிறகு, ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டு, உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து, நன்கு பிசிற வேண்டும்.

**  சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்.

வழிமுறை 2 (சுலப முறை )
**  அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நன்கு வடிகட்டி, கிரைண்டரில் இட்டு சிறிது சிறிதாக நீர் சேர்த்து மை போல் அரைக்க வேண்டும்.

**  பிறகு, ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்து கொண்டு, உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்

அட செய்ய :
**  வாழை இலைகளை 6 இன்ச் அகல துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

**  அவற்றை அடுப்பு தணலில் சில நொடி மேலும் கீழும் காட்டி, வாழை இலை இளகும் வரை  வாட்டி எடுக்கவும்.

**  இதற்கு இடையில், ஒரு பெரிய பாத்திரத்தில், நிறைய நீர் எடுத்து கொதிக்க விடவும்.

**  இந்த வாழை இலை துண்டுகள் ஒவ்வொன்றிலும், 2 தேக்கரண்டி மாவை வட்டமாக ஊற்றி, சுருட்டி, இரண்டு முனைகளையும் நூலால் கட்டவும்.

**  உடனே கொதிக்கும் நீரில் இந்த சுருளை போட்டு விட வேண்டும். இது மிகவும் முக்கியம்.

**  மாவு முழுதும் தீரும் வரை, இவ்வாறு சுருள்கள் செய்து கொதிக்க விட வேண்டும்.

**  சுருள்கள் நன்கு வெந்ததும், மேலே மிதக்கும்.

**  அப்போது, வெளியே எடுத்து மாவு துண்டுகளை இலையில் இருந்து நீக்கி, 3-4 முறை குளிர் நீரில் அலம்ப வேண்டும்.

**  இவ்வாறு அலம்புவதால், அதன் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும்.

**  பிறகு, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

மாற்று முறை :

கொதிக்க வைப்பது விட, நீராவியில் வேக வைப்பதும் சிறந்தது. உங்கள் சௌகர்யத்திற்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.



பிரதமன் செய்ய :

**  துருவிய தேங்காயை மிக்சியில் இட்டு, முதலில் 1/4 கப் கெட்டி பால் எடுத்து கொள்ள வேண்டும்

**  பிறகு, 1 ½ கப் இரண்டாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்

**  அடுத்து, 2 கப் மூன்றாம் பால் எடுத்து கொள்ள வேண்டும்

**  அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி, மூன்றாம் பால், வெல்லம் மற்றும் சர்க்கரையை கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

**  பிறகு இரண்டாம் பாலையும், அட துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

**  இப்போது தேங்காய் பல் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும்.

**  முதலில் எடுத்த கெட்டி பாலை சேர்த்து, உடனே அடுப்பை அணைத்து, நன்கு கலக்கவும்.

இதோ சுவையான அட பிரதமன் தயார் !


அனைத்து கேரளத்து தோழமைகளுக்கு 
யாழ் இனிதின் திரு ஓணம் ஆஷம்சக்கள் !





Yazh Inidhu wishes
‘ Happy Onam to All friends from God’s Own Country’













 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking